அச்சுறுத்தல்கள் – தடைகள் – நெருக்கடிகள் மத்தியில் பொங்கல்.

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழர் திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்று வருகிறது. 108 பானையில் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இதில் தமிழ் அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

பொங்கல் விழாவிற்கு பொலிசார் இடையூறு விளைவிப்பதை போல நடந்து கொண்டாலும், திட்டமிட்டபடி பொங்கல் நிகழ்வுகள் நடைபெற்றது என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காலையில் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் மடைபரவி பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. இதை தொடர்ந்து மடப்பண்டம் மேளதாளத்துடன் நீராவியடி பிள்ளையாரிற்கு எடுத்து வரப்பட்டது.

அங்கு பொங்கல் ஏற்பாடுகள் நடந்தபோது, ஆலயத்தில் சட்டவிரோதமாக கட்டடம் அமைத்து தங்கியுள்ள பௌத்த பிக்குவின் கட்டடத்திற்கு அருகில் பொங்கல் பானைகள் வைக்கக்கூடாது என பொலிசார் அறிவுறுத்தினர். பிக்குவின் இருப்பிடத்திலிருந்து குறிப்பிட்ட தொலைவிற்கு அப்பாலும் பொங்கல் பானை வைக்க பொலிசார் அனுமதிக்கவில்லையென வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆலயத்திற்குள் 108 பொங்கல் பானையையும் வைக்க முடியாத இடநெருக்கடி ஏற்பட்டு, வீதியோரமாகவும் பொங்கல் இடம்பெற்றது.

இதேவேளை, இன்றைய தமிழர் திருவிழாவையொட்டி பெருமளவு பொலிசார் ஆலயத்தை சூழ பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்

இதேவேளை இன்றைய பொங்கல் விழாவில் வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், தமிழ் அரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, சிவசக்தி ஆனந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சி.சிறிதரன், சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராசா ஆகிய அரசியல் பிரமுகர்கள் அங்கு பிரசன்னமாகியுள்ளனர்.

 


Recommended For You

About the Author: ஈழவன்