ரணிலை தேசிய தலைவராக ஏற்றுக்கொள்ளுங்கள் – விஜயகலா கோரிக்கை.

நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சரியான ஒருவரை தேசியத் தலைவராக கொண்டு வர வேண்டும். அதற்கு இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே பொருத்தமானவராக இருப்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான விஐயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தும் ஆரம்ப நிகழ்வு பலாலி விமான நிலைய வாளகத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த காலங்களில் இயங்கிய இந்த விமான நிலையம் யுத்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட இருக்கின்றமை இந்த மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். இதனுடாக சிறந்த உறவுப்பாலத்தை அமைக்க முடியும். இதற்கு அனைவரும் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இதே போன்று இந்த மக்களுக்கு தேவையான பல அபிவிருத்திப் பணிகளை எமது அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இதற்கமையவே இந்த விமான நிலையமும் அபிவிருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இவ்வாறு மக்களுக்கு தேவையான அபிவிருத்திப் பணிகள் ஒரு புறம் முன்னெடுக்கப்பட்டாலும் கடந்த கால நிலைமைகளால் இங்கிருந்து இடம் பெயர்ந்து தொடர்ந்தும் அகதிகளாக மக்கள் வாழ்ந்து வருகின்றமை வேதனையாகவே உள்ளது.

கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்கின்ற இந்த மக்களின் காணிகள் மீள வழங்கப்பட்டு அவர்களும் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும். மேலும் காணிகள் வீடுகள் இல்லாமலும் மக்கள் உள்ளனர். ஆகவே அவர்களுக்கு காணிகளையும் வீடுகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமானது.

மேலும் இந்த விமான நிலைய விஸ்தரிப்பிற்கு மக்களது காணிகள் எடுக்கின்ற போது அவர்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்குவதுடன் நஸ்டஈடுகளையும் வழங்க வேண்டும். அதிலும் தேவைக்கு ஏற்ப காணிகளை எடுப்பதுடன் தேவைக்கு அதிகமாக காணிகளை எடுத்தக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

மேலும் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் சில வீதிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் இருப்பதால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஆகவே காணிகளை விடுவிப்பது போன்று இந்த வீதிகளையும் விடுவிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பாக இந்த மக்களுக்கு எதிராக இருந்த கடந்த ஆட்சியை மாற்ற வேண்டுமென மக்கள் முழுமையான ஆதரவை வழங்கியிருந்தனர். அதனூடாக ஐனாதிபதி தெரிவு செய்யப்பட்டு புதிய ஆட்சி கொண்டு வரப்பட்டது. இந்தக் காலத்தில் தான் மக்களுடைய பல பிரச்சனைகளைத் தீர்த்து அவர்களுடைய தேவைகள் எதிர்பார்ப்புக்களையும் இந்த அரசாங்கம் நிறைவேற்றி வருகின்றது.

ஆனால் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சூழ்ச்சியால் இவை தடைப்பட்டிருந்ததை மக்களும் நன்கு அறிவார்கள். ஆனாலும் அதனையெல்லாம் தாண்டி நாங்கள் மிீண்டும் எம்மாலான சேவைகளை இந்த மக்களுக்கு வழங்கி வருகின்றோம். அவ்வாறு அபிவிருத்தி செய்வது போன்று அரசியல் தீர்வையும் ஏற்படுத்த வேண்டும். இந்த இரண்டும் இந்த மக்களுக்கு அவசியமானதாகும்.
எனவே இந்த நாட்டிற்கு அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவர் தேசியத் தலைவராக வர வேண்டும். அதற்கும் எமது கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவே பொருத்தமானவராக இருப்பார். ஆகவே தேர்தல் வருகின்ற போது அந்த நேரத்தில் இதைக் குறித்து அறிவிப்பதே பொருத்தமானதாக இருக்கும். அந்த நேரத்தில் மக்கள் ஏற்றுக் கொள்கின்ற அல்லது விரும்புகின்ற ஒருவரை நாங்கள் தேசியத் தலைவராக நாங்கள் கொண்டு வருவோம்.

இதே வேளை பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் இருந்து நீண்ட காலத்தின் பின்னராக ஆரம்பிக்கப்படுகின்ற இந்த விமான சேவைகளுக்கு குறைந்தளவிலான அறிவீடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென இந்த இடத்தில் கேட்டுக் கொள்கின்றேன் என விஐயகலா மகேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

சில மாதங்களின் முன்னர், யாழில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முன்பாக விடுதலைப்புலிகளை பற்றி வாயில் வந்ததை பேசி, அமைச்சு பதவியையும் இழந்த கலா, அதன்பின்னர் பல்டி அடித்து, மேடைகளில் ரணில் விக்கிரமசிங்கவை தேசியத்தலைவர் என கூறி வருவது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்