ஹை-ஜாக் மாலும் ஹை-கூல் கூர்காவும்!

சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்த கூர்கா பட டிரெய்லரை அனிருத் வெளியிட்டுள்ளார்.

யோகி பாபு கதாநாயகனாக நடித்த தர்மபிரபு சென்ற வாரம் (ஜூன் 28) வெளியாகியுள்ளது. அரசியல் பகடியாக வந்துள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், யோகி பாபு கதாநாயகனாக நடித்த மற்றொரு படமான கூர்கா படத்தின் டிரெய்லர் இன்று(ஜூலை 5) மாலை அனிருத் வெளியிட இணையத்தில் வெளியானது.

டிரெய்லரின் துவக்கத்திலேயே இப்படத்தை பார்த்து குறை கூறுபவர்கள் எங்கள் ‘குஜால் ஜண்டா’ பொம்மையால் தாக்கப்படுவார்கள் என்ற எச்சரிக்கையோடு துவங்குகிறது.

நகரத்திலுள்ள முக்கியமான மால் தீவிரவாதிகளால் ஹை-ஜாக் செய்யப்படுகிறது. முதல்வர் பாதுகாப்பை பலப்படுத்துகிறார்.

போலீஸ், ராணுவம், மீடியா குவிகிறது. மக்கள் பதட்டத்தோடு இருக்க, மால்-ஐ காக்க வேண்டிய கூர்கா யோகி பாபுவோ செமக் கூலாக சார்லியோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்.

நித்தியானந்தா, ப்ளூ சட்டை மாறன், விஜய்-அஜித் வசனங்கள் என்று இணையதளத்தில் வைரலாகி கவனம் ஈர்த்த விஷயங்களை டிரெய்லரில் கலாய்த்துள்ளனர்.

அதனால் ஏற்கனவே பார்த்து, கேட்ட விஷயங்களாக இருப்பதால் புதுமையற்று இருக்கிறது. படத்தில் நாய் ஒன்றுக்கு முக்கியமான கதாபாத்திரம் இருக்குமென்று தெரிகிறது.

இந்த படத்தில் யோகி பாபுவிற்கு ஜோடியாக கனடா நாட்டைச் சேர்ந்த எலிசா நடித்துள்ளார். டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, 100 படங்களைத் தொடர்ந்து சாம் ஆண்டன் இயக்கியுள்ளார்.

சார்லி, ஆனந்த்ராஜ், லிவிங்ஸ்டன் நடித்துள்ளனர். இசை ராஜ் ஆர்யன், ஒளிப்பதிவு கிருஷ்ணன் வசந்த். 4 மன்கீஸ் ஸ்டூடியோ இப்படத்தை தயாரித்துள்ளது.


Recommended For You

About the Author: Editor