மக்களுக்காகவே அரசியலுக்கு வந்தேன் – சி.வி.

நான் நீதித்துறையில் நீண்டகாலம் பணிபுரிந்ததன் விளைவாக எனது வாழ்க்கையில் பெரும்பகுதி மக்களில் இருந்து ஒதுங்கிய ஒரு தனிமை வாழ்க்கையாகவே கழிந்து விட்டது. உள்ளுர மனிதத்துவ உணர்வுகள் இருந்தபோதும் அதை வெளிக்கொண்டுவர எனது பதவி முட்டுக்கட்டையாக இருந்தது. தீர்ப்புக்களில் அவை பிரதிபலித்தன. ஆனால் மக்களோடு மக்களாக இணைந்து செயற்பட வாய்ப்புக் கிடைக்கவில்லை. இப்போது அரசியலில் முழுநேரமாக இறங்கிய பின்னர் எம் மக்கள்தான் எனது கரிசனையாக ஆகிவிட்டார்கள் என நாகர்கோவிலில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலும் மக்களின் கருத்துக்களை நேரில் கேட்டறியும் முகமாகவும் மக்கள் சந்திப்புகளை மேற்கொண்டுவரும் செயற்திட்டத்தின் தொடர்ச்சியாக நாகர்கோவில் பகுதியில் மக்கள் சந்திப்பு நடாத்தப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தின் நாகர்கோவில் கிராமத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பிற்கு முன்னதாக காலை 10.00 மணியளவில் நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் 1995.09.22 அன்று மேற்கொள்ளப்பட்ட விமான குண்டுவீச்சில் படுகொலை செய்யப்பட்டிருந்த மாணவர்களது நினைவுத் தூபிக்கு க.வி.விக்னேஸ்வரன் மாலை அணிவித்தும் ஏனையவர்கள் மலர்தூவியும் வணக்கம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினரும் வடமராட்சி தொகுதி அமைப்பாளருமான இரா.மயூதரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடல் நிகழ்வில் இரா.மயூதரனின் தலைமையுரையைத் தொடர்ந்து தமிழ் மக்கள் கூட்டணியின் பொருளாளரும் பொருளாதார விவகாரங்களுக்கான உப செயலாளருமான பேராசிரியர் வி.பி.சிவநாதன், கொள்கைபரப்பு உப செயலாளரும் ஊடகப்பேச்சாளருமான க.அருந்தவபாலன், யாழ் பல்கலைக் கழக முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவரும் இளைஞர் அணி இணைப்பாளருமான கிருஸ்ணமீனன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கியிருந்ததுடன் சட்ட விவகாரங்களுக்கான உப செயலாளர் திருமதி ரூபா சுரேந்திரன் மற்றும் நிர்வாக உப செயலாளரும் கிளிநொச்சி மாவட்ட குழுவின் உறுப்பினருமான ஆலாலசுந்தரம் ஆகியோர் பங்கேற்றிருந்தார்கள்.

தொடர்ந்து குடமுழுக்கு திருவிழாவிற்கான ஆயத்த பூசை வழிபாடுகள் நடைபெற்றுவரும் அருள்மிகு நாகர்கோவில் முருகன் ஆலய நிர்வாகத்தினரின் அழைப்பின் பெயரில் ஆலயத்திற்கு சென்று பூசை வழிபாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததுடன் அப்பகுதி இளைஞர்களது வேண்டுகோளை ஏற்று விளையாட்டு மைதாணத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு அவர்களது தேவைகளை கேட்டறிந்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்