நளினிக்கு ஒரு மாத கால பிணை வழங்கியது நீதிமன்றம்!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு ஒரு மாத காலம் பிணை வழங்கப்பட்டுள்ளது.

அவரது மகளின் திருமணத்திற்காக பிணை வழங்ககோரி நளினி மனுவொன்றை தாக்கல் செய்திருந்த நிலையில் குறித்த மனுமீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது ஊடகங்களை சந்திக்க கூடாது என்ற நிபந்தனையுடன் ஒரு மாத காலம் பிணை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லண்டனில் வசிக்கும் தனது மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக 6 மாதங்கள் பிணை வழங்குமாறு கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு மீதான விசாரணையின்போது நளினியை உயர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில் சிக்கல் நிலை காணப்படுவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நளினி சிறையில் இருந்தபடி காணொளிக் காட்சி மூலம் வாதிட விருப்பமா என நீதிபதிகள் கேள்வியெழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த நளினி, காணொளிக் காட்சி மூலம் வாதிட விருப்பமில்லை என்றும், நேரில் ஆஜராகி வாதிடுவதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து தன்னுடைய வழக்கில் தானே ஆஜராகி வாதிட கட்சிக்காரர் ஒரு கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் அந்த கோரிக்கையை நிராகரிக்க முடியாது என கூறிய நீதிபதிகள், நளினியை முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தனர்.

இதன்படி இன்று சென்னை உயர் நீதிமன்றில் நளினி முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரின் பிணை கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் ஒரு மாதகால பினை அனுமதியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor