மைத்திரியின் நடவடிக்கைக்கு நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு!!

மரண தண்டனை கைதிகள் எவரையும் தூக்கிலிடவும், தூக்கிலிட வழங்கப்பட்ட அனுமதிக்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் இன்று இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி வரை இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

12 வழக்குகள் இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த போதும் மரண தண்டனை கைதியான மொஹம்மட் ஹனீபா என்பவரின் வழக்கே இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஜனாதிபதி சட்டத்தரணியான எம்.ஏ.சுமந்திரன் வழக்கு தொடர்பான தனது வாதத்தை தொடர்ந்த நிலையில் இதனை ஆராய்ந்த மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

மரண தண்டணையை அமுல்படுத்த கடந்த 26ஆம் திகதி ஜனாதிபதி கையெழுத்திட்டதையடுத்து 12 அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகளை உயர் நீதிமன்றில் திருமதி கௌரி சங்கர் தவராஜா தாக்கல் செய்திருந்தார்.

மரண தண்டணையை எதிர்நோக்கும் கைதிகளின் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணிகள் எழுவரும், மனித உரிமை ஆர்வலர்கள், சமய பெரியார்கள் ஆகியோர் சார்பாக இந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களில் சட்டமா அதிபர், நீதி அமைச்சர், சிறைச்சாலை ஆணையாளர், வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகர், ஜனாதிபதியின் செயளாளர், மனித உரிமை ஆணையாளர் சட்டத்தரணிகள் சங்க தலைவர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இதேவேளை கடந்த வருடம் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் போதும் ஜனாதிபதிக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

அரசியலமைப்பை மீறி நாடாளுமன்றத்தை கலைத்தார் என மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில் இன்றைய தினமும் ஜனாதிபதியால் அமுல்படுத்தப்பட்ட மரண தண்டனை நடைமுறைக்கும் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor