இந்தியாவிற்கு எதிராக அமெரிக்கா முறைப்பாடு!!

இந்தியாவிற்கு எதிராக உலக வர்த்தக அமைப்பிடம் அமெரிக்கா முறைப்பாடு செய்துள்ளது.

இருபத்தெட்டு அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாகவே இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டில், ‘உலக வர்த்தக அமைப்பின் வரிகள் மற்றும் வர்த்தகம் தொடர்பான பொது ஒப்பந்தத்தில் இந்தியா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், சுங்க வரி போன்று வர்த்தகத்துக்கு தடை ஏற்படுத்தும் காரணிகளை களைவது, வர்த்தகத்தை ஊக்குவிப்பது ஆகியவையே ஆகும்.

இந்நிலையில், அமெரிக்க தயாரிப்பு 28 பொருள்களுக்கு இந்தியா கூடுதல் இறக்குமதி வரி விதித்துள்ளது. உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், இத்தகைய வரியை இந்தியாவால் விதிக்க இயலாது. இது உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்த விதிகளுக்கு எதிரானதாகும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி விதிப்புத் தொடர்பாக உலக வர்த்தக அமைப்பிடம் முதலில் சம்பந்தப்பட்ட நாடுகள் முறைப்பாடு செய்யும். அதையடுத்து சம்பந்தப்பட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி, வரி விதிப்பு பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்ளப்படும். இதற்கு 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்.

இந்த அவகாசம் நிறைவடைந்ததும், பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லையெனில், உலக வர்த்தக அமைப்பு விசாரணைகளை முன்னெடுக்கும். வர்த்தக விவகாரம் தொடர்பாக இந்தியா, அமெரிக்கா அதிகாரிகள் அடுத்த வாரம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பிடம் அமெரிக்கா முறைப்பாடு செய்துள்ளமை சர்வதேச அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Recommended For You

About the Author: Editor