சஹ்ரானின் தங்கையிடம் மூடிய அறைக்குள் விசாரணை.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் மூளையாக செயற்பட்ட சஹ்ரான் காசிமின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் மூவர் விசாரணைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றுக்கு  நேற்றைய தினம் புதன்கிழமை  கொண்டு செல்லப்பட்டனர். 

கல்முனை நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்றதாக கூறப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் தகவல்களை உறுதிப்படுத்தி இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான விசாரணை இடம்பெற்றது. அதற்காகவே சஹ்ரானின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் மூவரும் மன்றில் முற்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களில் சஹ்ரானின் தங்கையான நியாஸ் மதனியா மற்றும் அவரது கணவர் எம்.எம். நியாஸ் சாய்ந்தமருது தாக்குதலில் உயிரிழந்தவார உரைகல் ஊடகவியலாளர் என கூறப்படும் நியாஸ் என்பவரின் மனைவி அஸ்மியா உள்ளிட்டோர் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் குற்றப்புலனாய்வு பிரிவினரின் வாகனம் மற்றும் சிறைச்சாலை பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர்.

மேலும் இவ்வாறு முற்படுத்தப்பட்டவர்களில் சஹ்ரானின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் தொடர்பான விசாரணை யாவும் நீதிவானின் சமாதான அறையில் மேற்கொள்ளப்பட்டது.
சஹ்ரானின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் தனித்தனியாக முற்படுத்தப்பட்டு நீண்ட நேர விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர். 

சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்து உயிர் தப்பிய சஹ்ரான் காசிமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியா (வயது 28) கடந்த புதன்கிழமை (26) காலை கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு உயிரிழந்தவர்களின் தகவல்களை உறுதிப்படுத்த அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து கடந்த தவணை அழைத்து வரப்பட்ட சஹ்ரானின் மனைவி இம்முறை கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவில்லை. 

இறப்பு விசாரணைகளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி புதன்கிழமை அன்று ஒத்திவைத்து நீதிவான் உத்தரவிட்டார்.


Recommended For You

About the Author: ஈழவன்