அரையிறுதியில் நுழைந்த இந்தியா!!

வங்கதேசத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றுள்ள இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 40ஆவது ஆட்டத்தில் நேற்று (ஜூலை 2) வங்கதேச அணியை எதிர்த்து இந்தியா விளையாடியது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய லோகேஷ் ராகுலும் ரோஹித் ஷர்மாவும் முதல் விக்கெட்டுக்கு 180 ரன்கள் சேர்த்தனர்.
அதிரடியாக விளையாடிய ரோஹித் ஷர்மா இந்த உலகக் கோப்பை தொடரில் தனது நான்காவது சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் 104 ரன்களில் வெளியேற, லோகேஷ் ராகுலும் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
நான்காவது வீரராகக் களமிறங்கிய ரிஷப் பந்த் சிறிது நேரம் தாக்குப் பிடித்து விளையாடி 41 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணித் தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய முஸ்தாபிசூர் ரஹ்மான் 5 விக்கெட் வீழ்த்தினார்.
கடினமான இலக்கை நோக்கிக் களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தமிம் இக்பால் 22 ரன்களுக்கும், சௌமியா சர்கார் 33 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த ஷகிப் அல் ஹசன் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார். அவருக்கு முஷ்பிகுர் ரஹிம் மற்றும் லிட்டன் தாஸ் நல்ல ஒத்துழைப்பு தந்தனர்.
இவர்களும் ஆட்டமிழக்க வங்கதேச அணி 33.5 ஓவர்களில் 179 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நேரத்தில் ஜோடி சேர்ந்த சபிர் ரஹ்மானும் முகமது சைஃபுதீனும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். ஆனால், ஜஸ்பிரீத் பும்ரா கடைசி கட்ட ஓவர்களைச் சிறப்பாக வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
வங்கதேச அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 13 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
வங்கதேச அணி அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.

Recommended For You

About the Author: Editor