
திருகோணமலை பொது வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதேச செயலகத்தில் திட்டமிடல் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் 39 வயதான தினேஷ் சுஜேந்தினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக காய்ச்சல் காரணமாக தனியார் வைத்திய நிலையம் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண்ணுக்கு அதிக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மரணம் தொடர்பில் திருகோணமலை பொது வைத்தியசாலை உதவி சட்ட வைத்திய சிங்கள அதிகாரி ரசிக்க விஜயரத்ன பிரேத பரிசோதனையை மேற்கொண்டிருந்த நிலையில் மேலதிக பரிசோதனைக்காக சடலத்தின் உடற்பாகங்கள் கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இருந்தபோதிலும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை மாத்திரம் 71 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களில் இருந்தும் காய்ச்சல் காரணமாக அதிக அளவிலான நோயாளர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வருகை தருகின்ற போதிலும் வைத்தியசாலையில் டெங்கு நோயாளர்களுக்கான “டெங்கு பிரிவு” ஒன்று இல்லாமையினால் அதிகளவிலான நோயாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், சிகிச்சையில் வழங்குவதற்கு தாமதங்கள் ஏற்படுவதாகவும் நோயாளர்களின் உறவினர்களும் பெற்றோர்களும் குற்றம் சுமத்துகின்றனர்.