வடக்கில் சில பாடசாலைகள் மூடப்படும் அபாயம்- சார்ள்ஸ்!!

வடக்கில் உள்ள சில பாடசாலைகள் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, புதுக்குளம் பகுதியில் உள்ள பாடசாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “பெற்றோரின் ஒத்துழைப்பின்றியும் தமது கிராம பாடசாலைகளில் மாணவர்களை சேர்க்காமையினாலும் வடக்கில் இப்போது சில பாடசாலைகள் மூடப்படுகின்ற நிலையுள்ளது.

35 இற்கு உட்பட்ட மாணவர்கள் இருந்தால் பல பாடசாலைகள் மூடப்படகின்ற நிலை எமது வடக்கு மாகாணத்தில் இருக்கின்றது. அருகில் உள்ள பாடசாலைகளுடன் இணைத்து இயக்குகின்ற நிலைமையும் காணப்படுகின்றது.

இலங்கையில் இருக்கின்ற அரசியல் சூழ்நிலை எமது இருப்பு தொடர்பாக நாம் தனித்து வாழமுடியுமா என்ற கேள்விக்கு அப்பால் எமது மாணவர்களின் சாதனைகளே எங்களுக்கு ஓரளவு நிம்மதியைக் கொடுக்கின்றது. மாணவர்களது வெற்றிகளும் சாதனைகளுமே அரசியல் ரீதியான இருப்புக்கும் பக்கபலமாக அமையும் என்பதே உண்மை.

பாடசாலையில் சிறுபராயத்தில் சாதனை படைத்துவிட்டு பல்கலைக்கழகம் சென்று பட்டங்களைப் பெற்றபின்னர் பலர் எமது ஆரம்ப பாடசாலைகளையும் ஆசிரியர்களையும் மறந்து விடுகின்றோம்.

இன்று வடக்கு மாகாணத்தில் பெயர் சொல்லக் கூடிவர்களாகவும் கல்விமான்களாகவும் இருக்கின்றவர்கள் தமது ஆரம்பக் கல்வியை ஒரு பாடசாலையில் சாதாரண ஆசிரியரிடம் தான் கற்றிருப்பார்கள். அந்த ஆசிரியர்களே ஒரு மாணவன் எதிர்காலத்தில் எவ்வாறு வரப்போகின்றார் என்று மாணவனை பூரணப்படுத்துவதில் மிகப்பெரிய பங்கை ஆற்றுகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor