
பழிவாங்கும் நடவடிக்கையை ஈரான் மேற்கொண்டால் நாம் வாங்கிய இரண்டு ட்ரில்லியன் பெறுமதியான அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தவேண்டிய நிலை ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “இரண்டு ட்ரில்லியன் டொலர்களை இராணுவ உபகரணங்களுக்காக செலவிட்டுளோம். நாங்களே உலகின் மிகப்பெரிய மற்றும் இதுவரை சிறந்தவர்கள்!
ஈரான் ஒரு அமெரிக்காவின் தளத்தை அல்லது எந்தவொரு அமெரிக்கரையும் தாக்கினால், அந்த புத்தம் புதிய அழகான உபகரணங்களில் சிலவற்றை நாங்கள் தயக்கமின்றி அனுப்புவோம்.” என கூறியுள்ளார்.
ஈராக்கின் பாக்தாத்தில் இந்த வாரம் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஈரானிய இராணுவத் தளபதி காசிம் சுலைமானி மற்றும் ஈரானிய ஆதரவு ஈராக் போராளித் தலைவர் அபு மஹ்தி அல் முஹந்திஸ் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இதனால் ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்த கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும் என்ற அச்சம் காணப்படுகின்றது.
இருப்பினும் ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் அல்லது அமெரிக்க சொத்துக்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் சுமார் 52 இடங்களில் அமெரிக்கா தாக்குதல் தொடுக்கும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.