
மியன்மாரில் இடம்பெற்ற கோர விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்ததோடு, 33 பேர் காயம் அடைந்துள்ளனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) யாங்கூன் நகரில் இருந்து பயணித்த பேருந்து மியன்மார்- தாய்லாந்து எல்லையில் சென்றுக் கொண்டிருந்த போது, பேருந்தும் எதிரே வந்த காரும் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேரும் அடங்குவதாகவும், காயமடைந்தவர்கள் தற்போது அருகிலுள்ள மியாவடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிப்பின் எண்ணிக்கை அதிகரிக்க கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
பேருந்து வேகமாக பயணித்த வேளை, வேககட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த காருடன் வேகமாக மோதி செங்குத்தான பள்ளத்தாக்கில் வீழ்ந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கரேன் மாநிலத்தில் உள்ள மியாவடி நகரம் மியன்மாருக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான முக்கிய நில எல்லைப் புள்ளிகளில் ஒன்றாகும், இரு திசைகளிலும் தினமும் நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் கடந்து செல்கின்றனர்.
அடர்த்தியான காடுகள் மற்றும் செங்குத்தான மலைத்தொடர்கள் சூழந்திருக்கும் இப்பகுதில் விபத்துக்கள் என்பது புதிதல்ல.
அண்டைய மோன் மாநிலத்தில் கடந்த வாரம் நடந்த ஒரு விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இதேபோல ஒக்டோபர் மாதம் யாத்ரீகர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் 15 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர்.
மியன்மாரின் வீதி பாதுகாப்பு தரங்கள் இப்பகுதியில் உள்ள அண்டை நாடுகளை விட பின்தங்கியுள்ள நிலையிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது.