போர் மூளும் அபாயம்: அமெரிக்கர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல்

அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானிய இராணுவ உயரதிகாரிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில், பாக்தாத்தில் உள்ள அமெரிக்கர்கள் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டுமென பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

ஈராக்கில் உள்ள பாக்தாத் சர்வதேச விமான நிலைய வளாகத்தில், நேற்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குத்ஸ் படைப்பிரிவுத் தளபதி காசிம் சோலிமானி, ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய தளபதி அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவம் இருநாடுகளுக்கிடையில் மட்டுமல்லாது உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஈரானிலுள்ள குடிமக்களை ‘உடனடியாக ஈராக்கிலிருந்து புறப்பட வேண்டும்’ என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

‘அமெரிக்க குடிமக்கள் விமானம் வழியாக முடிந்தவரை புறப்பட வேண்டும், அது தோல்வியுற்றால், நிலம் வழியாக மற்ற நாடுகளுக்கு செல்ல வேண்டும்’ என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

ஈரான் இராணுவத் தளபதி கொல்லப்பட்டதை உறுதி செய்த பென்டகன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறியுள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ளது.

இத்தாக்குதலினால் கடும் ஆத்திரமடைந்துள்ள ஈரானின் ஜனாதிபதி ஹசன் ருஹானி, ஈரானின் இதயம் காயப்பட்டிருக்கிறது எனவும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தனது கொடூரக் குற்றத்திற்காக பழிவாங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால், ஈரான் அமெரிக்கா மீது பதில் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்திற்கு மத்தியில், 3,000 துருப்புக்களை அமெரிக்கா மத்திய கிழக்கிற்கு அனுப்பியுள்ளது. மேலும், இஸ்ரேலிய தூதரகங்களின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் அமெரிக்காவால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து துணைத் தளபதியான இஸ்மாயில் கானி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்