தமிழகத்தின் இளம் ஊராட்சி மன்ற தலைவர்!

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் பணி நேற்று காலை முதல் தொடங்கி முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில் பல்வேறு சுவாரஸ்யங்களும் நடந்து வருகின்றன.

திருச்செங்கோடு இரண்டாவது வார்டு ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றி பெற்றார். இதுபோன்று பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகள் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் வெளி வந்துகொண்டிருக்கின்றன.

இளம்வயது ஊராட்சி மன்றத் தலைவர்

கிருஷ்ணகிரி, ஒசூா் அருகேயுள்ள சூளகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டிநாயக்கன்தொட்டி ஊராட்சி மன்றத் தலைவராக, கல்லூரி மாணவி ஜெ.சந்தியா ராணி (21) வெற்றி பெற்றார். மாலூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வரும் இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் அனிதாவை விட 108 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சந்தியா ராணிக்கு 1056 வாக்குகளும், எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளருக்கு 948 வாக்குகளும் கிடைத்துள்ளன.
இதையடுத்து தமிழகத்தில் இளம் வயது ஊராட்சி மன்றத் தலைவர் என்ற பெருமையை சந்தியா ராணி தட்டிச் சென்றுள்ளார்.

வெற்றி குறித்து அவர், ”எனது படிப்பு இந்த ஆண்டு நிறைவுபெறும். மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்ய வேண்டியது அதிகம் உள்ளது. சாலை மற்றும் குடிநீர் வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். மக்களுக்கு சேவை செய்ய பாடுபடுவேன்” என்றாா். வெற்றிக்கு காரணமான தனது அப்பா அம்மாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே கமுதி ஒன்றியம் ஏ.தரைக்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மூதாட்டி கா.தங்கவேலு(73) வெற்றி கண்டுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை விட 60 வாக்குகள் கூடுதலாக பெற்று, வெற்றிவாகை சூடியுள்ளார்.

துப்புரவுத் தொழிலாளி
விருதுநகர், கான்சாபுரம் பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்த சரஸ்வதி, தனது அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டு கான்சாபுரம் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றிபெற்றுள்ளார்.


Recommended For You

About the Author: Editor