தீவிரமடையும் மருத்துவர்கள் போராட்டம்!

மருத்துவ பேராசிரியர்கள் தங்களுக்குப் பணி உயர்வு வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் வரும் 9ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

7ஆவது ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதியம் மற்றும் சலுகைகளில் உள்ள நிவர்த்திகளைச் சரிசெய்யக்கோரி மத்தியப் பிரதேச மருத்துவ பேராசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் ஆளும் காங்கிரஸ் அரசு மருத்துவ பேராசிரியர்களின் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். தங்களது கோரிக்கைகளுக்கு மாநில அரசு செவிசாய்க்காததால் அம்மாநிலத்தில் இதுவரை 1000 மருத்துவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து மத்திய மருத்துவ பேராசிரியர் சங்கத்தின் மாநில செயலாளர் மருத்துவர் ராகேஷ் மால்வியா, இன்றைக்குள் (03.01.2020) பிற கல்லூரிகளில் பணியாற்றி வரும் 2300 மருத்துவ பேராசிரியர்களும் தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்குவார்கள் என தெரிவித்து உள்ளார்.

ராகேஷ் மால்வியா இது குறித்து மேலும் கூறுகையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவ பேராசிரியர்கள் வருகிற 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். எங்கள் பதவி மற்றும் ஊதிய உயர்வு தொடர்பான தெளிவான அறிக்கை ஒன்றை அரசு வகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்,

வருகிற 9 ஆம் தேதி முதல் மருத்துவ பேராசிரியர்கள் தங்களது மருத்துவ பணிகளை மேற்கொள்ள மாட்டோம் என அறிவித்து உள்ளதால் , அங்குள்ள ஆயிரக்கணக்கான நோயாளிகள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள், மற்றும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள 13 அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் மருத்துவமனைகளும் இணைந்து செயல்படுகின்றன. இந்த மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேலை நிறுத்தத்தால் இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் அவதிக்கு உள்ளாவார்கள். மத்தியப் பிரதேசத்தில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியுடன் இயங்கி வரும் ஹமதியா மருத்துவமனையில் மட்டுமே நாள் ஒன்றுக்கு சுமார் 3,500 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor