சிஏஏ -உலக அரங்கில் தனிமைப்படுகிறதா இந்தியா?

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் உலக அரங்கில் இந்தியா தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக முன்னாள் வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர மேனன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று (ஜனவரி 3) நடைபெற்ற கல்வியாளர்கள் கருத்தரங்கத்தில் பேசிய சிவசங்கர் மேனன்,

“குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விமர்சனக் குரல்கள் அதிகமாகியிருக்கின்றன. இந்த சட்டத்துக்குப் பின் இந்தியாவின் மீதான பார்வை மாறியிருக்கிறது. இந்த நடவடிக்கை மூலம் இந்தியா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்தியாவின் கருத்து மாறிவிட்டதா என்று நமது நண்பர்கள் கூட அதிர்ச்சியடைந்துள்ளனர். சகிப்புத் தன்மையற்ற நாடு என்ற பெயர் பெற்றிருக்கும் பாகிஸ்தானுக்கு இணையாக இந்தியாவின் பெயரும் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளே இப்போது தென்படுகின்றன. இப்போது உலகமே நமக்கு முக்கியமானது. இந்தியா இப்போது தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்வது யாருக்கும் நல்லதல்ல.

பங்களாதேஷ் உருவாவதற்கு நாம் உதவியபோது, உலகளாவிய கருத்து நம் பக்கம் இருந்தது. இப்போது என்ன நடக்கிறது? நாம் பெரிதும் தனிமைப்படுத்தப்படுகிறோம், இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தோரின் ஒரு பகுதியையும் சில தீவிர வலதுசாரி ஐரோப்பிய யூனியன் எம்பிக்களையும் தவிர நமக்கு தவிர சர்வதேச ஆதரவு இல்லை.

நாம் சர்வதேச உடன்படிக்கைகளை மீறுவதாகத் தெரிகிறது. சர்வதேச சட்டங்களை, ஒப்பந்தங்களை அமல்படுத்த முடியாது என்று நினைப்பவர்கள், சர்வதேச மரபுகளை மீறுபவர்களாக கருதப்படுவதன் அரசியல் மற்றும் பிற விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும்” என்று பேசியிருக்கிறார் சிவசங்கர் மேனன்.
இவர் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது


Recommended For You

About the Author: Editor