அதிமுக தோல்விக்கு காரணம்: அன்வர் ராஜா!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்ததால்தான் அதிமுக தோல்வியைத் தழுவியது என முன்னாள் எம்.பி அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

27 மாவட்டங்களுக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் அதிமுக தோல்வியைத் தழுவியுள்ளது.
ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் அதிமுகவை விட திமுகதான் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் பொதுத் தேர்தலில் மட்டுமே தேசிய அளவிலான பிரச்சினைகள் எதிரொலிக்கும் என்பது மாறி உள்ளாட்சித் தேர்தலிலும் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது

அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவின் மகள் ராவியத்துல் அதபியா ராமநாதபுரம் மண்டபம் ஒன்றியம் 2வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால், ராவியத்துல் அதபியா அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப்புலட்சுமியைவிட 1,343 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார். இதுபோலவே மண்டபம் ஒன்றிய 6வது வார்டில் போட்டியிட்ட அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலியும் தோல்வி அடைந்தார். சிஏஏவை அதிமுக ஆதரித்ததுதான் இவர்களின் தோல்விக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு இன்று (ஜனவரி 3) பேட்டியளித்த அன்வர் ராஜா, “உள்ளாட்சித் தேர்தலில் சிறுபான்மையின மக்கள் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை முழுமையாக எடுத்துள்ளனர். அதற்கு காரணம் குடியுரிமை திருத்த மசோதாவை அதிமுக ஆதரித்ததுதான். அதிமுக நமக்கு எதிராக செயல்படுகிறது என்ற எண்ணம் சிறுபான்மையினர் மத்தியில் உள்ளது. அதனால் 90 சதவிகிதம் இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் அதிமுக சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவதே கடினமாக இருந்தது.

எங்கள் பகுதியில் அதிமுக சார்பாக வேட்பாளரே நிறுத்த முடியாததால், தோல்வி வந்தாலும் கவலை இல்லை என்று எனது மகளையே களமிறக்கினேன். இன்னொரு பகுதியிலும் யாரும் போட்டியிட முன்வராததால் எனது மகனை வேட்பாளராக நிறுத்தினேன். தோல்வி வரும் என்று தெரிந்தும் அவர்களை களமிறக்கினேன். இதுதான் உண்மை” என்று தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்ததுதான் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோல்வியடையக் காரணம். குடியுரிமை சட்டம் மூலம் நாடற்றவர்களாக, குடியுரிமை இல்லாதவர்களாக பாஜக ஆக்கிவிடுமோ என்ற இஸ்லாமியர்கள் அஞ்சுகிறார்கள் என்று குறிப்பிட்ட அன்வர் ராஜா, “அசாமுக்கு மட்டும் பொருந்தும் என்பதால்தான் தேசிய குடியுரிமை பதிவேட்டை அதிமுக ஆதரித்தது.

இது நாடு முழுவதும் வரப்போகிறது என்ற பீதியும் பயமும் மக்களுக்கு இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது. அதிமுக தலைமை இதுகுறித்து ஆய்வு செய்கிறது. கண்டிப்பாக மறுபரிசீலனை செய்வார்கள் என்று நம்புகிறேன்” என்றும் கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor