உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பன்னீர் ரியாக்‌ஷன்!

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து துணை முதல்வர் பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவியிடங்களில் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளும் சம அளவிலான இடங்களைக் கைப்பற்றி இருந்தாலும், ஒன்றிய குழு உறுப்பினர் பதவியிடங்களில் ஆளும் அதிமுகவை விட, திமுக அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

எனினும் பல இடங்களில் தேர்தல் அதிகாரிகளின் துணையோடு அதிமுகவினர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறி திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால், திமுகதான் முறைகேடுகளில் ஈடுபட்டு வாக்கு எண்ணிக்கையை நிறுத்த முயற்சி செய்வதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் இன்று (ஜனவரி 3) செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்திடம், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த பன்னீர், “ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும், மக்களின் தீர்ப்பை அதிமுக தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறது” என்று தெரிவித்துவிட்டு, மற்ற கேள்விகளுக்கு பதிலளிக்காமல் புறப்பட்டுச் சென்றார்.


Recommended For You

About the Author: Editor