ஆட்டத்தைத் தொடங்கியது தர்பார்!

ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் வரும் ஜனவரி 9 அன்று பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் முதல் படமான தர்பார் திரைப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இது லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் மூன்றாவது படமாகும்.

முருகதாஸ் இயக்கத்தில் வரும் படம் என்றால் அதில் சமூக பிரச்சனைகள், அரசியல் விமர்சனம் அதிகப்படியாக இருக்கும். அதற்கு அவரது இயக்கத்தில் வெளியான ரமணா, கத்தி, சர்க்கார் போன்ற படங்களே உதாரணம். அவை வெளிவருவதற்கு முன்பும், வெளிவந்த பின்னரும் அரசியல்வாதிகளின் விமர்சனங்களுக்கு ஆளானது.

அரசியல் கட்சி தொடங்குவேன் என்று ரஜினி அறிவித்து இரண்டு வருடங்கள் கழித்து தர்பார் வெளிவர இருக்கிறது. இந்த படத்துக்கான அதிகாலை சிறப்பு காட்சிக்கான டிக்கெட் விற்பனையைத் திரையரங்குகள் தொடங்கியிருக்கிறது. ரஜினியின் ரசிகர்கள், சமூக வலைத்தள சினிமா விமர்சகர்கள் போன்றோர் அதிகாலை காட்சியில் தர்பார் படத்தைப் பார்ப்பதற்கு இப்போதே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தொடங்கியிருக்கிறார்கள்.

இவர்களின் ஆர்வத்தையும் வேகத்தையும் பயன்படுத்தி தங்கள் கல்லாவை நிரப்புவதற்கு எப்போதும் போல் இப்போதும் திட்டமிட்டு திரையரங்குகள், டிக்கெட் விலையை 15 மடங்கு அதிகரித்திருக்கின்றன. தமிழகத்தில் குளிர்சாதன வசதியுள்ள திரையரங்குகளில் அதிகபட்ச டிக்கெட் கட்டணமாக 200 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்வதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.
திரையரங்குகள், அரசு விதிமுறைகளை இதுபோன்ற பெரிய படங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் வருகின்ற படங்களுக்கு கறாராகக் கடைப்பிடித்து அரசு நிர்ணயித்த கட்டணத்தில் டிக்கெட் விற்பனை செய்வது கிடையாது. தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று விமர்சனம் செய்த ரஜினிகாந்த் நடித்த படங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

அரசியலைத் தூய்மைப்படுத்த வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்புகளில் பேசிவரும் ரஜினிகாந்த், இதுவரை தான் நடித்து வெளிவரும் படங்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை காட்டிலும் அதிக விலைக்கு விற்பனை செய்யும் டிக்கெட்டுகளை வாங்க வேண்டாம் என்று எப்போதும் கூறியதில்லை.

அதே நிலைமை தான் தற்போது தர்பார் படத்திற்கும் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அதிகாலைக் காட்சிக்கு சுமார் ஒரு லட்சம் டிக்கெட்டுக்கள் விற்பனையாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தியேட்டர் வட்டாரத்திலிருந்து கூறப்படுகிறது. 120 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட வேண்டிய டிக்கெட்டுகளின் விலையை சென்னை தவிர்த்து வெளியூர்களில் பத்து மடங்கு, சென்னை நகரத்தில் ஏழு மடங்கு என அதிகரித்து ரகசியமாக விற்பனை செய்து வருகின்றனர்.
-இராமானுஜம்


Recommended For You

About the Author: Editor