ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் – முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர்.

ஈராக்கில் உள்ள பாக்தாத் சர்வதேச விமான நிலையம் மீது அமெரிக்கா நடத்திய ரொக்கெற் தாக்குதலில், ஈரானின் முக்கிய படைப் பிரிவின் தளபதி உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர்.

குறித்த விமான நிலையத்தின் சரக்குகள் கையாளும் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் தாக்குதலில் வெடித்துச் சிதறின.

இந்த தாக்குதலில், ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குத்ஸ் படைப்பிரிவுத் தளபதி காசிம் சோலிமானி, ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய தளபதி அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர்.

ஈரான் இராணுவத் தளபதி கொல்லப்பட்டதை உறுதி செய்த பென்டகன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறியுள்ளது.

இதேவேளை, இன்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலின் பின்னர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கக் கொடியை தனது ருவிற்றர் தளத்தில் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஈராக்கில் கடந்த வாரம் ஹிஸ்புல்லா அமைப்பின் தளம் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை கண்டித்து, ஹிஸ்புல்லா ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராடிய அவர்கள், தூதரகத்தை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

தூதரகம் சூறையாடப்பட்டதற்கு ஈரான் தான் பொறுப்பேற்க வேண்டும் என டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதன் பின்னணியில் இன்றைய தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையில் போர்ச் சூழலை அதிகரித்துள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்