பங்களாதேஷ் பிரிமீயர் லீக்: ராஜ்ஷாஹி ரோயல்ஸ் அணி வெற்றி

பங்களாதேஷ் பிரிமீயர் லீக் ரி-20 தொடரின் 29ஆவது லீக் போட்டியில், ராஜ்ஷாஹி ரோயல்ஸ் அணி 30 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

சில்ஹெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ராஜ்ஷாஹி ரோயல்ஸ் அணியும், ரங்க்பூர் ரேஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ரங்க்பூர் ரேஞ்சர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய ராஜ்ஷாஹி ரோயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ரவி பொபாரா ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களையும், சொயிப் மாலிக் 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

ரங்க்பூர் ரேஞ்சர்ஸ் அணியின் பந்துவீச்சில், முஷ்டபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும், அரபாத் சனி, மற்றும் மொஹமட் நபி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 180 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ரங்க்பூர் ரேஞ்சர்ஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் ராஜ்ஷாஹி ரோயல்ஸ் அணி 30 ஓட்டங்களால் வெற்றியை பதிவு செய்தது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஃபாஸில் மஹ்மூத் 34 ஓட்டங்களையும், டொம் அபெல் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ராஜ்ஷாஹி ரோயல்ஸ் அணியின் பந்துவீச்சில், மொஹமட் நவாஸ், சொயிப் மாலிக் மற்றும் கம்ரூல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மொஹமட் இர்பான் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 29 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 4 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட ரவி பொபாரா தெரிவுசெய்யப்பட்டார்.


Recommended For You

About the Author: ஈழவன்