பிக் பேஷ்: லார்கின் சிறப்பான துடுப்பாட்டத்தால் மெல்பேர்ன் அணி வெற்றி.

பிக் பேஷ் ரி-20 தொடரின் 19ஆவது லீக் போட்டியில், மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணியும், சிட்னி தண்டர் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிட்னி தண்டர் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய சிட்னி தண்டர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, அலெக்ஸ் ரோஸ் 40 ஓட்டங்களையும், மெத்தியு கில்கேஸ் 28 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சில், ஹரிஸ் ரவுப் 3 விக்கெட்டுகளையும், கிளென் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளையும், ஆடம் செம்பா மற்றும் கிளின்ட் ஹின்ச்லிஃப் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 143 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி, 19.4 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.

இதனால், மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றியை பதிவு செய்தது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, நிக் லார்கின் 65 ஓட்டங்களையும், மார்கஸ் ஸ்டொயினிஸ் 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சிட்னி தண்டர் அணியின் பந்துவீச்சில், டேனியல் சேம்ஸ் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் மோறிஸ் மற்றும் நாதன் மெக்ஆண்ட்ரூ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 45 பந்துகளில் 1 சிக்ஸர் 8 பவுண்ரிகள் அடங்களாக 65 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட நிக் லார்கின் தெரிவு செய்யப்பட்டார்.


Recommended For You

About the Author: ஈழவன்