நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஆரம்பம்.

எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கு அமைய, அதி விசேட வர்த்தமானி மூலம் கடந்த மாதம் 2ஆம் திகதி நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இதற்கமைய, நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமானது.

ஜனாதிபதிக்காக தீர்க்கப்படவிருந்த 21 மரியாதை வேட்டுக்கள் மற்றும் வீதியின் இருமருங்கிலும் இடம்பெறவிருந்த இராணுவ மரியாதை ஆகிய சம்பிரதாயங்கள், ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய இடம்பெறாது என நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வரவேற்பு நிகழ்வின் பின்னர் காலை 10 மணிக்கு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் தலைமை உரையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றவுள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை ஜனாதிபதி முன்வைக்கவுள்ளார்.

ஜனாதிபதி கொள்கை பிரகடன உரையை ஆற்றியதன் பின்னர், சபை ஒத்திவைக்கப்பட்டு பிற்பகல் 1 மணிக்கு மீண்டும் நாடாளுமன்றம் கூடவுள்ளது.

இதன்போது புதிய எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ரஞ்சித் சொய்சாவின் மறைவின் பின்னர் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக வருண லியனகே பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்