11 கோடி மோசடி – மின்னஞ்சலில் தகவல் வழங்கியவர் தொடர்பில் விசாரணை

யாழ்ப்பாணத்தில் இயங்கும் நிதி நிறுவனம் ஒன்றால் தனிநபர் ஒருவருக்கு சுமார் 11 கோடி ரூபா முற்பணம் வழங்கி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வழக்கில் முகாமைத்துவத்துக்கு மின்னஞ்சல் ஊடாகத் தகவல் வழங்கியவர் தொடர்பில் மன்றுக்கு அறிவிக்குமாறு, பெரும் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார்.
யாழ்ப்பாணம் நகரில் நீண்டகாலமாக இயங்கி வரும் நிதி நிறுவனம் ஒன்றால், மாதகலைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு சுமார் 10 கோடி ரூபா பணம் மீற்றர் வட்டிக் கணக்கில் மோசடியாக வழங்கப்பட்டுள்ளது. அதனை நிதி நிறுவனத்தின் முகாமையாளர், அடகுப் பிரிவு உத்தியோகத்தர்கள் இணைந்து தங்க நகை அடகு மீதான முற்பணம் என கணக்குக் காட்டியுள்ளனர்.

எனினும் நிதி நிறுவனத்தின் கணக்காய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணையில் வர்த்தகருக்கு வழங்கப்பட்ட முற்பணத்துக்கு உரிய நகைகள் அடகுப் பிரிவிடம் இருக்கவில்லை. அதுதொடர்பில் கணக்காய்வுப் பிரிவால், நிதி நிறுவன முகாமைத்துவத்துக்கு அறிக்கையிடப்பட்டது.

சுமார் 6 மாதங்கள் இந்தப் பணம் தனிநபர் ஒருவருக்கு எந்தப் பொறுப்பும் பெறப்படாமல் மோசடியாக வட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கணக்காய்வுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. அதுதொடர்பில் உரிய பணம் மற்றும் வட்டி அடங்கலாக சுமார் 11 கோடி ரூபா பணத்தை வர்த்தகரிடமிருந்து மீள அறவீடு செய்யுமாறு யாழ்ப்பாணக் கிளை முகாமையாளருக்கு நிதி நிறுவனத்தின் முகாமைத்துவம் கால அவகாசம் வழங்கியிருந்தது.

எனினும் உரிய காலத்துக்குள் பணம் மற்றும் வட்டியை மீள அறவீடு செய்வதற்கு கிளை முகாமையாளர் தவறிவிட்டதால், அவருக்கு எதிராக கொழும்பு பெரும் நிதி மோசடிகள் பொலிஸ் விசாரணைப் பிரிவுக்கு நிதி நிறுவனத்தின் முகாமைத்துவம் முறைப்பாடு வழங்கியது.

அதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பெரும் நிதி மோசடிகள் பொலிஸ் விசாரணைப் பிரிவு, யாழ்ப்பாணக் கிளை முகாமையாளரைக் கைது செய்தது. முகாமையாளரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அவரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடந்த வியாழக்கிழமை முற்படுத்தினர்.

சந்தேகநபரை வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், இந்த மோசடி வழக்குடன் தொடர்புடைய நிதி நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சிலரிடம் விசாரணைகளை முன்னெடுக்க அனுமதியளித்தது.

அதனடிப்படையில் அடகுப் பிரிவில் பணியாற்றிய ஆண் உத்தியோகத்தர் ஒருவரும் பெண் உத்தியோகத்தர்கள் இருவரும் பெரும் நிதி மோசடிகள் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

பெண் உத்தியோகத்தர்களின் சுகநலன் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதால் அவர்கள் இருவருக்கும் பிணை வழங்கிய மேலதிக நீதிவான், ஆண் உத்தியோகத்தரை  திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைத்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. முகாமையாளர் தவிர்ந்த ஏனைய குற்றஞ்சாட்டப்பட்ட 3 உத்தியோகத்தர்களும் மன்றில் முன்னிலையாகினர்.
“இந்த மோசடி தொடர்பில் முகாமைத்துவத்து சந்தேகநபரால்தான் தகவல் வழங்கப்பட்டது. அவரையும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவராகப் பொலிஸார் சேர்த்துள்ளனர்” என்று பெண் உத்தியோகத்தர் ஒருவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றுரைத்தார்.

இந்த மோசடி தொடர்பில் முகாமைத்துவத்துக்கு மின்னஞ்சல் அனுப்பிவைத்தவர் யார் என்பது தொடர்பில் விசாரணையை மேற்கொண்டு உரிய அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிவான், ஆண் உத்தியோகத்தரை வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.


Recommended For You

About the Author: ஈழவன்