திருப்பதி லட்டின் விலை அதிகரிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் மானியம் எதிர்வரும் வைகுண்ட ஏகாதசி முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனால், பக்தர்கள் இனி ஒரு லட்டுக்கு ரூ.50 செலுத்தி லட்டு பிரசாதம் பெற்றுக்கொள்ளலாம்.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதமும் உலக பிரசித்தி வாய்ந்ததாகும்.

திருப்பதிக்கு வரும் பக்தர்கள் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்காக லட்டு பிரசாதத்தை வீடுகளுக்கு வாங்கி செல்வது வழக்கம். ஆனால், இந்த லட்டு பிரசாதத்தை தயாரிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூடுதலாக செலவிடுகிறது.

ஒரு லட்டு பிரசாதம் தயார் செய்ய திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.38 செலவாகிறது.

நடைப்பயணமாக மலையேறி வரும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாகவும், தர்ம தரிசனம் செய்யும் பக்தர்களுக்கும் மலையேறி செல்லும் பக்தர்களுக்கும், ஒரு லட்டு ரூ.10 வீதமாக 2 லட்டுகளும், ஒரு லட்டு ரூ. 25 வீதமாக மேலும் 2 லட்டுகளும் வழங்கப்படுகிறது.

மேலும், ரூ. 300 சிறப்பு தரிசனம், விஐபி பிரேக் தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தலா 2 லட்டுகள் இலவசமாகவும் வழங்கப்படுகிறது.

இதனால் தேவஸ்தானத்துக்கு லட்டு விற்பனை மூலம் சிறிது நஷ்டம் ஏற்படுகிறது என்றும் கூறலாம்.

மேலும், ரூ.50 இற்கும் தனி மையங்கள் அமைத்து அதன் மூலம் தற்போது பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில்தான் தேவஸ்தானம் சற்று லாபத்தை பார்க்கிறது.

ஆனால், இனி திருமலைக்கு ஏழுமலையானை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இது வரும் வைகுண்ட ஏகாதசி முதல் அமலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே சமயம், ஒரு லட்டு ரூ. 50 என்ற விலையில் பக்தர்களுக்கு விநியோகம் செய்யவும் தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.

ஆதலால், இனி லட்டு பிரசாதத்தின் மானியம் முழுவதுமாக ரத்து செய்யப்பட உள்ளது. ஒரு இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திருப்பதி தேவஸ்தானம், லட்டு மீதுள்ள மற்ற சலுகைகளை நிறுத்த உள்ளது என்று தெரியவந்துள்ளது.

மலையேறி திவ்ய தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ஏற்கனவே ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் 20 ஆயிரம் லட்டுகள் விநியோகம் செய்யப்படுகிறது.

தினமும் சுவாமியை சுமார் 55 ஆயிரம் முதல் 65 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். அதன்படி, தினமும் 55 முதல் 65 ஆயிரம் லட்டுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

மற்றபடி, ரூ.10 வீதம் 2 லட்டுகளோ, அல்லது ரூ. 25 வீதம் 2 லட்டுகளோ இனி வழங்கப்பட மாட்டாது. ஆதலால், அனைவரும் இனி ஒரு லட்டு ரூ.50க்கு வாங்க வேண்டி வரும். இதற்கு எந்தவொரு சிபாரிசு கடிதம் தேவைப்படாது.

இதன் மூலம் தேவஸ்தானத்துக்கு ஆண்டுக்கு ரூ.400 முதல் 450 கோடி லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Recommended For You

About the Author: ஈழவன்