தாண்ட வேண்டிய தடைகள் ஏராளம்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் கோட்டாபய எதிர்கொள்ளும் இடையூறுகள் அதிகம். அமெரிக்க நீதிமன்றங்களில் பெருமளவு வழக்குகள் அவரை சுற்றி வளைத்துள்ளதால் அந்நாட்டுக் குடியுரிமையை நீக்கிக் கொள்வது இலகுவான விடயமல்ல!

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் குறியாக இருக்கிறார்.கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலைப் படை தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ஷவால் நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழித்துவிட முடியும் என்று இலங்கை மக்கள் பலர் கருதுகின்றனர்.

கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் வைத்து அண்மையில் பி.பி.சிக்கு பேட்டியளித்தார் அவர். “எங்களுடைய ஆட்சிக் காலத்தில் தேசத்தின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்தோம்.இந்த அரசு அப்படிச் செய்யவில்லை. எங்களுடைய ஆட்சிக் காலத்தில் உருவாக்கியிருந்த சில பாதுகாப்பு ஏற்பாடுகளை இவர்கள் கலைத்து விட்டார்கள்” என்றார் அவர்.

இலங்கையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவருடைய போக்கில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட அவர் உத்தேசித்துள்ளார்.

“பிரதான எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக நான் இருப்பேன். மற்ற கட்சிகள் மற்றும் குழுக்களின் ஆதரவையும் நாங்கள் பெறுவோம்”என்று அவர் கூறுகிறார்.

இக்கட்சி அதிகாரப்பூர்வமாக தனது வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கின்றன. தனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் கூறுகிறார். ஆனால் மக்கள் முன் செல்வதற்கு முன்பாக சில தடைகளை அவர் தாண்டியாக வேண்டியுள்ளது.

முதலாவது தடையாக இருப்பது அவருடைய ஆரோக்கியம். கோட்டாபயவுக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அவருடைய இரட்டைக் குடியுரிமை குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய பிரச்சினையும் உள்ளது.

அவர் இலங்கை மற்றும் அமெரிக்க குடியுரிமைகள் வைத்துள்ளார். இலங்கை அரசியல் சட்டத்தின்படி, அமெரிக்க குடியுரிமையை விட்டுத் தரும் வரை அவர் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட முடியாது.

அமெரிக்க குடியுரிமையை விட்டுத் தருவது தொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விண்ணப்ப ஆவணங்களை சமர்ப்பித்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக உள்ள வழக்குகள் அடுத்த பிரச்சினையாக இருக்கும். ஏப்ரல் மாதம் தொடரப்பட்ட முதலாவது வழக்கில், 10 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் பத்திரிகை ஆசிரியர் ஒருவரைக் கொலை செய்ய அவர் உத்தரவிட்டார் என்பது குற்றச்சாட்டாக உள்ளது. போர்க் காலத்தில் தமிழ்க் கைதி ஒருவர் கொடுமைப்படுத்தப்பட்டார் என்பது அவருக்கு எதிரான இரண்டாவது வழக்காக உள்ளது.

‘சன்டே லீடர்’ என்ற பிரபலமான பத்திரிகையின் ஆசிரியராக இருந்த லசந்த விக்ரமதுங்க, ராஜபக்ச சகோதரர்களை கடுமையாக விமர்சித்து வந்தார். கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புத் துறை செயலாளராக இருந்த போது, ஆயுதங்கள் வாங்கியதில் ஊழல்கள் நடைபெற்றதாக தொடர்ச்சியாக அவர் செய்திகள் வெளியிட்டு வந்தார்.

விக்ரமதுங்கவுக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. தனது மரணத்துக்கு முன்னதாக அதுகுறித்து அவர் தலையங்கம் எழுதியுள்ளார். அரசு தன்னை கொலை செய்யக் கூடும் என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். 2009 ஜனவரியில் கொழும்பு நகரில், பட்டப்பகலில் அடையாளம் தெரியாத நபர்களால் லசந்த படுகொலை செய்யப்பட்டார்.

விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா இதுதொடர்பாக கலிபோர்னியாவில் தொடர்ந்துள்ள வழக்கில், அளவு குறிப்பிடப்படாத இழப்பீடு கோரியுள்ளார். தனது தந்தையின் கொலையை தூண்டியவர் என்றும், அதற்கு ஒப்புதல் அளித்தவர் என்றும் கோட்டாபய மீது அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கனடா குடியுரிமை பெற்றிருந்த தமிழரான ராய் சமந்தனம் தொடர்பானது இரண்டாவது வழக்கு. போர் முடிவதற்கு முன்னதாக, விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருந்ததாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டார். 2010இல் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னதாக, தாம் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றில் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோத்தபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்பதால், இந்த வழக்குகள் அமெரிக்க நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ளன.”இவற்றை நான் செய்யவில்லை என்பதால், இரு வழக்குகளுமே அடிப்படை ஆதாரமற்றவை”என்று அவர் கூறுகிறார்.

அவருக்கு எதிரான வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ராஜபக்சவிடம் இருந்து நஷ்டஈடு கோரி ஜூன் 26 ஆம் திகதி, மேலும் 10 பேர் கலிபோர்னிய நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அவருடைய தலைமையின் கீழ் பணியாற்றிய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தவர்களால் தாங்கள் கொடுமைப்படுத்தப்பட்டதாக சில புகார்களும், பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டதாக சில புகார்களும் அதில் உள்ளன.

தனக்கு எதிரான இந்த அனைத்துப் புகார்களும் அரசியல் காரணங்களுக்காக கூறப்படுபவை என்று அவர் கூறுகிறார். அமெரிக்க நீதிமன்றங்களில் அவருக்கு எதிரான வழக்குகள் விசாரணையில் உள்ள நிலையில், தனது அமெரிக்க குடியுரிமையை விட்டுத் தருவது அவ்வளவு எளிதானதாக இருக்காது. அதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாமல் போகலாம்.

சுமார் மூன்று தசாப்தங்களாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்தது. அதில் பெருமளவானோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. பல ஆயிரம் பேரை இன்னும் காணவில்லை.

சரணடைந்தவர்களைக் கொலை செய்து விட்டதாகக் கூறும் குற்றச்சாடுகளை கோட்டாபய கடுமையாக மறுக்கிறார்.

“னக்கு அதில் நம்பிக்கை இல்லை. இராணுவத்திடம் சரணடைந்த அனைவரும் பதிவு செய்யப்பட்டனர். எல்லாமே அவசரமாக நடந்தன. எல்லாமே குழப்பமான சூழ்நிலையில் நடைபெற்றன” என்று அவர் கூறுகிறார்.

கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த சுமார் 13,000 விடுதலைப் புலிகளுக்கு, போர் முடிந்த பிறகு மறுவாழ்வு வசதிகள் செய்து தரப்பட்டன என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். விடுதலைப் புலிகளில் சிலர் இரகசிய சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர் என்ற புகார்களையும் அவர் மறுக்கிறார்.

அவரை விமர்சிப்பவர்கள் இதை ஏற்க மறுக்கின்றனர். போர் முடிந்த பிறகு செய்தியாளர்கள், மனித உரிமைக் குழுவினர், காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆகியோர் இராணுவ முகாம்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. காணாமல் போனவர்கள் என்னவானார்கள் என்பதை சுதந்திரமான அமைப்பு எதுவும் உறுதி செய்யவில்லை.

2015 ஆம் ஆண்டில் எதிர்பாராத விதமாக மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் தோல்வியடைந்த போது சிறுபான்மை தமிழர்களும், மனித உரிமைப் போராளிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். நாட்டில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிடும், பேச்சுரிமை, பத்திரிகை சுதந்திரம் எல்லாம் பாதுகாக்கப்படும் என்று அவர்கள் நம்பினார்கள்.

போர் முடிவுக்கு வந்த ஆண்டில் அமைதி நிலவியது. போரின் வடுக்கள் மறைவதற்கான அவகாசமாக அது அமைந்தது.ஆனால் அந்த எண்ணங்களை தகர்ப்பதாக ஈஸ்டர் தின குண்டுவெடிப்புகள் அமைந்து விட்டன. சமீபத்தில் அரசியல் நெருக்கடிகளுடன், இந்தத் தாக்குதல்களும் நடந்ததால் மக்களின் எண்ணங்கள் மாறி விட்டன.

ஆனால் கோத்தாவின் போன்ற ஒருவரின் தலைமைத்துவ ஆசையானது மக்களின் உரிமைகள் மற்றும் பத்திரிகை சுதந்திர ஆபத்தை மிஞ்சியதாக இருந்து விடக் கூடாது என்று மனித உரிமை போராளிகள் எச்சரிக்கின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்