இந்தோனசியாவில் கனமழை – 9 பேர் உயிரிழப்பு

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜகார்த்தாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகளும், கார்களும் நீரில் மூழ்கியுள்ளன.

வணிக மற்றும் இராணுவ விமானங்களைக் கையாளும் ஹலிம் பெர்தானகுசுமா விமான நிலையத்தின் ஓடுபாதையில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பல விமானங்கள் ஜகார்த்தாவின் பிரதான சோகர்னோ – ஹட்டா சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டன.

இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜகார்த்தா பேரிடர் மேலாண்மை முகமைத் தலைவர் சுபேஜோ,

‘கீழே இருந்த மின்சார கம்பியைக் கடந்து 16 வயதுச் சிறுவன் செல்லும்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் தாழ் வெப்பநிலை காரணமாக உயிரிழந்தனர்.

அங்கு ஒரு நதி அதன் கரைகளை உடைத்துக்கொண்டு பாய்ந்து செல்வதால் மழை வெள்ளம் நான்கு மீட்டர் (13 அடி) உயரத்தை எட்டியது.

இதனால் ஒரு மாவட்டத்தில் ஒரு வயதான தம்பதியினர் தங்கள் வீட்டிற்குள் சிக்கிக்கொண்டனர்.

செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய மழையால் நகரின் புறநகரில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ள நீர் குறைந்து விடும் என்றுதான் நம்பினோம். ஆனால், கனமழை தொடர்ந்து கொண்டேயிருப்பதால் ஜகார்த்தாவில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

சுமார் 30 மில்லியன் மக்கள் வசிக்கும் பெரிய ஜகார்த்தா நகரம் முழுவதும் நீரில் மூழ்கிய நூற்றுக்கணக்கான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சில ரயில் பாதைகள் மற்றும் நகரத்தின் விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன’ எனக் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்