தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்

இலங்கையில் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஜி.கே.வாசன் நேற்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “இலங்கையின் 2020 ஆம் ஆண்டு சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது என்று இலங்கை அரசு தீர்மானித்திருப்பது ஏற்புடையதல்ல.

மேலும், இதுவரையில் தேசிய கீதம் தமிழ் மொழியிலும், சிங்கள மொழியிலும் பாடப்பட்டு வந்த நிலையில் திடீரென்று சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்திருப்பது தமிழர்களை வேறுபடுத்திக் காட்டும் வகையில் அமைந்துவிடும்.

குறிப்பாக இலங்கையின் அரசியல் அமைப்பில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது 1978 ஆம் ஆண்டு இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் தேசிய கீதம் சிங்கள மொழி மற்றும் தமிழ் மொழியில் எப்படி இசைக்கப்பட வேண்டும் என்று தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப்படும் என்று தீர்மானித்தால் அது மத நல்லிணக்கத்திற்கும், இன நல்லிணக்கத்திற்கும் உகந்ததாக இருக்காது.

இந்திய அரசு, இலங்கை அரசோடு தொடர்பு கொண்டு இலங்கையில் தேசிய கீதமானது தமிழ் மொழியிலும் பாடப்பட வேண்டும் என்பதை உறுதிபடத் தெரிவித்து இலங்கை வாழ் தமிழ் மக்களின் சுதந்திரமான,  பாதுகாப்பான வாழ்வுக்கு பாதுகாப்பாக விளங்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்