ஜனாதிபதியின் அதிகாரங்களை பலப்படுத்த 22 ஆவது திருத்தம்

பாதுகாப்பு அமைச்சு மற்றும் வேறு அமைச்சுக்களையும் ஜனாதிபதி தமது வசம் எடுத்துக் கொள்வதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் தனிநபர் சட்டமூலம் ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சபையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் என இந்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 19 ஆவது திருத்தத்தின் கீழ், சாம்பல் நிறப் பகுதியாக மாறியுள்ள ஜனாதிபதிக்கான அமைச்சுகள் ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார்.

அந்தவகையில் அரசியலமைப்பின் 43 வது பிரிவின், திருத்தமாக கொண்டு வரப்படும் இந்த விதியின் கீழ், ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு மற்றும் வேறு எந்த அமைச்சுகளையும் வைத்திருக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

19 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைக்கு வரும் வரையில்ஜனாதிபதியிடம், பாதுகாப்பு அமைச்சு இருந்து வந்தது. இருப்பினும் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ், ஜனாதிபதி தனக்கு கீழ் பாதுகாப்பு அமைச்சையும் இரு அமைச்சுக்களையும் வைத்திருக்க முடியாது.

எனவேதான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சு பதவி தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இருப்பினும் பொலிஸ், அரச புலனாய்வு சேவை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம் மற்றும் தேசிய மருந்துகள் கட்டுப்பாட்டு சபை மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உள்ளிட்ட முப்பத்தொன்று அரச நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன.

அந்தவகையில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்தால் 19 வது திருத்தத்தை ரத்து செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

ஆகவே ஜனாதிபதிக்கான அதிகாரங்களை அதிகரிக்கும் முகமாக அரசியலமைப்பின் 22 ஆவது திருத்ததை கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்