அதிர்ஷ்டம் கிடைக்குமென நினைத்துப் பார்க்கவில்லை!

நான் க.பொ.த உயர்தரத்தில் முதலாவதாகத் தோற்றிய போது நல்ல பெறுபேறு கிடைக்குமென எதிர்பார்த்த போதும் கிடைக்கவில்லை.இந்த நிலையில் இரண்டாவது தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தேன்.

வெளியான பெறுபேறுகளுக்கமைய மிகப்பெரிய அதிர்ஷ்டம் கிடைக்குமென நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை என க.பொ.த உயர்தர உயிரியல் பிரிவில்(பழைய பாடத் திட்டம்) தேசிய ரீதியிலும், மாவட்ட மட்டத்திலும் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்த யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி அபர்ணா கருணாகரன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

2009 க.பொ. த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு (27) வெள்ளிக்கிழமை இரவு வெளியாகியிருந்தது. குறித்த பெறுபேறுகளுக்கமையவே யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி உயிரியல் பிரிவில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

எனக்குச் சிறுவயது முதல் வைத்தியராக வர வேண்டுமென்ற ஆர்வமிருந்தது. இதனால் தான் க. பொ.த உயர்தரத்தில் உயிரியல் பிரிவைத் தெரிவு செய்து கல்வி கற்றேன்.

எனது கிராமத்தில் போரால் பாதிக்கப்பட்ட நிலையிலும், இடம்பெயர்ந்த நிலையிலும் பல மக்கள் வசித்து வருகிறார்கள். அத்துடன் வறுமையான நிலையிலும் பல மக்கள் வாழ்கிறார்கள்.

ஆகவே, எதிர்காலத்தில் வைத்தியராகி அவர்கள் அனைவருக்கும் இலவசமாக மருத்துவ சேவை செய்ய வேண்டுமென நான் விரும்புகின்றேன். எனது இந்த விருப்பம் நிறைவேற வேண்டுமெனக் கடவுளை வேண்டிக் கொள்கின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் கல்லூரியின் அதிபர் திருமதி- சுனித்ரா சூரியராஜா விசேடமாக கருத்துத் தெரிவிக்கையில்,

எமது பாடசாலையிலிருந்து இந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகளில் அபர்ணா கருணாகரன் உயிரியல் பிரிவில் (பழைய பாடத் திட்டம்) தேசிய ரீதியில் முதலாமிடத்தையும், மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும் பெற்றுள்ளார்.

முதலிடம் பெற்றுச் சாதித்த மாணவிக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதுடன் குறித்த மாணவி எமது பாடசாலைக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor