உறவுகள் மீதான தாக்குதல் அச்ச உணர்வை அதிகரித்துள்ளது!!

வவுனியாவில் நேற்று (30) டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து வட, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் ராஜ்குமார் தாக்கப்பட்டதை கண்டிப்பதாக முன்னாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை கண்டித்து அவரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும்,

இறுதி யுத்தத்திலும் அதற்கு முன்னரும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக தீர்வொன்றினை பெற்றுத்தருமாறு தொடர்ச்சியாக ஜனநாயக முறையில் கடந்த பல வருடங்களாக வவுனியாவில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் நேற்று போராட்டக்காரர்களில் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையானது கண்டனத்திற்குரியது. தமது உறவுகளை தொலைத்து விடை தெரியாது தொடர்ச்சியாக போராடிவரும் இவர்களுக்கு எதிராக முதன்முறையாக இவ்வாறான தாக்குதல் நடத்தப்பட்டமையானது மக்களின் ஜனநாயக போராட்டத்திற்கு எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே பார்க்கவேண்டியுள்ளது.

புதிய அரசாங்கம் அவர்களது பங்காளிகளை வைத்து மக்களை அச்சுறுத்தும் செயற்பாட்டை மீண்டும் ஆரம்பித்துவிட்டதா என சந்தேகம் கொள்ளவைக்கின்றது.

கடந்த காலங்களில் எமது கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு எதிராகவும் சில கசப்பான சம்பவங்கள் வவுனியாவில் நடந்தேறியுள்ளன.

எனினும் தங்கள் பிள்ளைகளை உறவுகளை தொலைத்தவர்கள் தமக்கான தீர்வு எதுவும் கிடைக்காமல் காலம் தாழ்த்தப்படுவதால் ஏற்பட்ட விரக்தியின் செயற்பாடாகவே அவற்றினை நாங்கள் கருதினோம். மாறாக அவர்கள் மீது எமக்கு எந்தவிதமான காழ்ப்புணச்சியும் கிடையாது.

அவர்களின் பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டதற்கு இலங்கை தமிழ் அரசுகட்சி காரணமில்லை என்பது போராட்டத்தை நடாத்தியவர்களுக்கும் நன்கு தெரியும்.

இந்த நிலையில் புதிய அரசு பொறுப்பேற்று அதன் நடவடிக்கைகள் இந்த நாட்டில் சிறுபான்மை தமிழ் இனம் மேலும் திட்டமிட்டு நசுக்கப்படும் அபாயம் உள்ள நிலையில் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறுவதானது அரசின் மீதும் அவர்களின் பங்காளிகள் மீதான அச்ச உணர்வை மேலும் அதிகரித்துள்ளது – என்றுள்ளது.


Recommended For You

About the Author: Editor