இந்தியாவில் குவியும் வெளிநாட்டுப் பயணிகள்!

2018ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை குறித்து ஜூலை 1ஆம் தேதி மக்களவையின் கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சரான பிரகலாத் சிங் படேல், எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், 2018ஆம் ஆண்டில் மொத்தம் 1.05 கோடிப் பேர் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.

இது 2017ஆம் ஆண்டு வருகையை விட 5.2 சதவிகிதம் அதிகமாகும். 2018ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வாயிலாக அரசுக்கு அந்நியச் செலாவணியில் ரூ.1.94 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.

2017ஆம் ஆண்டில் மொத்தம் 1 கோடிப் பேர் இந்தியாவுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் அவர்கள் வாயிலாக அரசுக்கு ரூ.1.77 லட்சம் கோடி வருவாய் கிடைத்தது.

இதுகுறித்து பிரகலாத் சிங் படேல் மேலும் கூறுகையில், “ஸ்வதேசி தர்ஷன் மற்றும் பிரசாத் திட்டங்கள் வாயிலாகச் சுற்றுலாத் துறையின் உள்கட்டுமான வசதிகளை மேம்படுத்த அரசு தரப்பிலிருந்து நிதியுதவி வழங்கப்படுகிறது.

நாலந்தா மற்றும் புத்தகயா ஆகிய இரண்டு பகுதிகளும் ஸ்வதேசி தர்ஷன் திட்டத்தில் புத்தமதப் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

நாட்டின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் பிகார் மாநிலத்தில் உள்ள மகாபோதி கோயில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது” என்றார்.


Recommended For You

About the Author: Editor