ஈபிடிபி திலீபன்,பார்தீபன் அடியாள்களுடன் அட்டகாசம்!

வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவரும் காணாமல் அக்கப்பட்ட உறவுகளின் சங்க வடக்கு கிழக்கு இணைப்பாளருமான கோ.ராஜ்குமார் மீது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

வவுனியா காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களிற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையால் ஒன்று வவுனியாவில் நாளை இடம்பெறவுள்ளது.

குறித்த சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராகவும் வவுனியாவில் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்பாட்டம் ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உருவப்படத்தில் ‘தமிழர்களின் விடுதலை போராட்டத்தை காட்டிக்கொடுத்த போர்குற்றவாளி தன் எழுச்சி மக்கள் போராட்டங்களையும் காட்டிக் கொடுக்க வந்துவிட்டான்.

ஐ.நாவே ஓநாயை உடனடியாக கைது செய் உண்மைகள் வெளிவரும்’என்ற வசனம் பொறிக்கப்பட்ட பதாதையை ஏந்தியிருந்ததுடன் அவரது உருவப் படத்திற்கு சாணியினை கரைத்து ஊற்றியதுடன் விளக்குமாறால் அடித்தும் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

இதனால் கோபமடைந்த ஈழமக்கள் ஜனநாயாக கட்சியின் உறுப்பினர்கள் அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பந்தல் அமைந்துள்ள பகுதிக்கு முன்பாக ஒன்று கூடியிருந்தனர். குறித்த பகுதியில் நின்றிருந்த சங்கத்தின் இணைப்பாளர் ராஜ்குமார் அவ்விடத்தில் இருந்து புறப்பட்டு சூசைபிள்ளையார் குளம் பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அவரை பின்தொடர்ந்து சென்ற ஈழமக்கள் ஜனநாய கட்சியினர் அவரை சூசைப்பிள்ளையார் குளம் பகுதியில் வழி மறித்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் தக்குதலிற்குள்ளானவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளானவர் கை மற்றும் உடலின் பல பாகங்களிலும் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor