படப்பிடிப்பை நிறைவு செய்த ‘ஏலே’ டீம்

சமுத்திரக்கனி நடிக்கும் ஏலே படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டத்தில் நிறைவடைந்துள்ளது.

பூவரசம் பீப்பி படத்தின் மூலம் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமானவர் ஹலீதா ஷமீம். அதைத் தொடர்ந்து அவர் சமுத்திரக்கனி, சுனைனா இருவரும் இணைந்து நடித்துள்ள சில்லு கருப்பட்டி படத்தை இயக்கியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர் ஏலே படத்தின் படப்பிடிப்பை மே மாதம் பழனியில் தொடங்கினார். ஒரே கட்டமாக இதன் படப்பிடிப்பு தற்போது நடந்துமுடிந்துள்ளது.

இதை சமுத்திரக்கனி தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

“ஏலே..! திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது… வெல்வோம்…!” என்ற சமுத்திரக்கனியின் பதிவுக்கு, இயக்குநர் ஹலிதா ஷமீம், “ ஒரே மூச்சாக படத்தை முடித்தது பிரமிப்பை தருகிறது.

உங்களின் அர்ப்பணிப்பின்றி இது நடந்திருக்க இயலாது. நன்றி சார்” என்று தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மஞ்சுநாயக்கன்பட்டியில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. கிராமத்தைச் சேர்ந்த பலரை நடிக்கவைத்துள்ளனர்.

காலா, விக்ரம் வேதா ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்ற மணிகண்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கபீர் வாசுகி இசையமைக்கிறார்.

இந்தப் படத்தை ஒய் நாட் பிலிம்ஸ், ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, புஷ்கர் – காயத்ரி தங்களது வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் முதன்முறையாக தயாரிக்கின்றனர்.

படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. விரைவில் சில்லுகருப்பட்டி, ஏலே படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.


Recommended For You

About the Author: Editor