அவுஸ்திரேலியாவுக்கு கெண்டு வரப்பட்ட அகதிகள்!

மனுஸ் மற்றும் நவுரு தீவில் செயல்பட்டு வரும் அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்த 40க்கும் அதிகமான அகதிகள் மருத்துவ வெளியேற்ற சட்டத்தின் கீழ் அவுஸ்திரேலியாவுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சைக்காக அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சிப்பவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துவரும் அந்நாட்டு அரசு, அவ்வாறு தஞ்சம் கோரிய இவர்களை சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக தடுத்து வைத்துள்ளது.

இதனால் பலர் மனநல ரீதியாகவும் உடல்நல ரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இப்படி பாதிக்கப்படும் அகதிககளை மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் என்பதை முன்வைத்து, கடந்த பிப்ரவரி மாதம் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளால் ‘மருத்துவ வெளியேற்ற மசோதா’ தாக்கல் செய்யப்பட்டது.

இம்மசோதா ஆளும் லிபரல் அரசின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டு சட்டமாக மாறியது. “மசோதா நிறைவேறியது முதல், இதுவரை மருத்துவ உதவி தேவைப்படும் 40 அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் உயிராபத்து, உறுப்பு குறைபாடுகள் எதிர்கொள்ளக்கூடிய அகதிகள்” என தஞ்சக்கோரிக்கையாளர் மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Kon Karapanagiotidis தெரிவித்துள்ளார்.

மருத்துவ வெளியேற்ற மசோதா நிறைவேறிய போதிலும், அதனை ஏற்கமாட்டோம் என சொல்லி வந்த ஆளும் லிபரல் கூட்டணி அரசு, தேர்தலில் பெரும்பான்மை பலத்தைப் பெற்று அச்சட்டத்தை நீக்குவோம் எனக் கூறிவந்தது.

இந்த நிலையில், கடந்த வாரம் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் லிபரல் கூட்டணி அரசு அமோக வெற்றிப்பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இந்த அதிர்ச்சியில் பல அகதிகள் தற்கொலைக்கும் முயன்றிருந்தனர்.

அதை பொருட்படுத்தாமல், மருத்துவ வெளியேற்ற சட்டத்தை நீக்குவதற்கான ஏற்பாடுகளை லிபரல் அரசு மேற்கொண்டு வருகிறது.

தேர்தலுக்கு பின்பு, மனுஸ் மற்றும் நவுருத்தீவில் நிலைமை படும் மோசமாக உள்ளதாக குறிப்பிட்டிருக்கும் மருத்துவ வெளியேற்ற குழுவின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சாரா டவ்நெண்ட், “கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளவர்களை பரிசோதிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.

சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு உதவி வேண்டி பெருமளவில் விண்ணப்பித்திருக்கின்றனர்,” எனக் கூறியிருக்கிறார். சராசரியாக நாளொன்றுக்கு மருத்துவ உதவிக்கேட்டு 11 விண்ணப்பங்கள் வருவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வந்த ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, சூடான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 1000 அகதிகள் மனுஸ் மற்றும் நவுருத்தீவில் அவுஸ்திரேலியாவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Recommended For You

About the Author: Editor