தனிநபர்களின் தகவல்களை ஒரே தேசிய தரவு நிலையத்தின் கீழ் சேகரிக்க ஜனாதிபதி கவனம்

தேசிய ஆள் அடையாள அட்டை, சாரதி அத்தாட்சிப்பத்திரம், குடிவரவு, குடியகல்வு ஆவணங்கள், பிறப்பு, இறப்புக்களை பதிவு செய்தல் உள்ளிட்ட அனைத்து தனிநபர் சார்ந்த தகவல்களையும் ஒரே தேசிய தரவு நிலையத்தின் கீழ் சேகரித்தல் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

இதனூடாக நேரம், மனிதவலு மற்றும் பெருமளவு பணம் விரயமாகுவதைக் குறைக்க முடியுமென தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப அமைச்சின் மூத்த அதிகாரிகளுடன் இன்று (30) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச குறிப்பிட்டார்.

“ஒரே தகவல்களை பல நிறுவனங்களில் சேகரிக்கும் முறையே தற்போது பாவனையில் உள்ளது. அவற்றை ஒரே கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதனூடாக தாமதங்களை தவிர்த்து வினைத்திறனான சேவைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும்” என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் போலியான மற்றும் மோசடித் தகவல் பரிமாற்றங்களையும் இதனூடாக தவிர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுக்கிடையிலான தொடர்புகள் நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே குறித்த நிறுவனங்களை ஒரே வலையமைப்பில் இணைப்பதன் ஊடாக உயர்ந்த பயனுறுதியை பெற்றுக்கொள்ள முடியும்.

தற்போது தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் அத்தகைய செயற்திட்டங்களை அவற்றின் பயனுறுதிக்கு நேரடியாக பொறுப்புக்கூறும் அமைச்சுக்கள் அல்லது நிறுவனங்களிடம் கையளித்தல் தொடர்பாகவும் ஜனாதிபதி இதன்போது கவனம் செலுத்தினார்.

உதாரணமாக பாடசாலை கனணிக் கூடங்கள் செயற்திட்டத்தை கல்வி அமைச்சிடம் கையளிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, அமைச்சின் செயலாளர்களான சூலானந்தா பெரேரா, பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.


Recommended For You

About the Author: ஈழவன்