கோவை அருகே ரூ.1000 நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல்

செல்லாது என அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு பிறகு பழைய ரூ.1000 நோட்டுகள் கட்டுக்கட்டாக சிக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சொர்கம் புதூரில் சொகுசு பங்களாவை வாடகைக்கு எடுத்து வசித்து வந்த ரஷீத் மற்றும் ஷேக் ஆகியோர் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய 1000 நோட்டுக்களை மாற்ற முயற்சிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் அவர்களின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.

மத்திய உளவுத்துறை நடத்திய சோதனையில் அந்த சொகுசு பங்களாவில் ரகசிய அறை ஒன்று அமைத்து அதில் பழைய 1000 நோட்டுகளை கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

2கோடியே 68 லட்சம் மதிப்புள்ள 1000 நோட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 1000 ரூபாய் பணக்கட்டுகள் போல் தயாரிக்கப்பட்ட 600 பழைய பேப்பர் கட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

இதன் மூலம் ரூ.1000 நோட்டுகளை சட்டவிரோதமாக மாற்ற முயன்றதோடு, ருபாய் நோட்டு போலவே பழைய பேப்பர்களை வைத்து மோசடியில் ஈடுப்பட திட்டமிட்டு இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து மூன்று ஆண்டுகள் கழித்து அதை மாற்றும் நடவடிக்கை தொடர்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Recommended For You

About the Author: Editor