ஜப்பான் மேற்காசிய கடல் பகுதிகளுக்கு படைகளை அனுப்புகிறது!

மேற்காசிய கடல் பகுதிகளில் தங்களது சரக்குக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அப்பகுதிகளுக்கு தங்களது படைகளை அனுப்ப ஜப்பான் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், இதற்கான அனுமதியை ஜப்பான் அமைச்சரவை வெள்ளிக்கிழமை வழங்கியது.

இந்தத் திட்டத்தின்படி, 260 கடற்படை வீரர்கள், ஒரு தாக்குதல் போர்க் கப்பல், இரு பி-3சி வகை கண்காணிப்பு விமானங்களை அந்தப் பகுதிக்கு ஜப்பான் அனுப்பவுள்ளது.

ஓமன் வளைகுடா, அரபிக் கடல், பாப் எல்-மாண்டெப் ஜலசந்தி ஆகிய பகுதிகளில் பிற நாடுகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் நோக்கில் இந்தப் படைகள் மேற்காசியாவுக்கு அனுப்பப்படுகின்றன.

இதுகுறித்து அமைச்சரவை தலைமைச் செயலர் யோஷிஹிடே சுகா கூறுகையில், ‘மேற்காசியப் பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அந்தப் பகுதியியைக் கண்காணிக்கும் நமது திறனை மேம்படுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது. அதன் காரணமாகவே, அங்கு படையினரை அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

எரிசக்தித் தேவைக்கு எண்ணெய் இறக்குமதியை ஜப்பான் நம்பியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது’ என கூறினார்.

ஏற்கெனவே, அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான மோதலால் மேற்காசிய கடல் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் அங்கு ஜப்பானும் படைகளை அனுப்புவது பதற்றத்தை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor