சிஏஏ எதிர்ப்பு போராட்டம் : 10,000 மாணவர்கள் மீது வழக்கா?

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடிய அலிகார் பல்கலைக் கழக மாணவர்கள் 10,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், 1000 பேர் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்திருப்பதாகக் காவல் துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக நாடு முழுவதும் போராட்டம் வெடித்து வருகிறது.

தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால் டெல்லி, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது. பல்வேறு பகுதிகளில் கல்லூரிகளுக்குத் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதுடன் தொலைபேசி சேவைகளும், இணையதள சேவைகளும் முடக்கப்பட்டன.

சிஏஏவுக்கு எதிராக அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைக் காட்டிலும் பல்கலை மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகளவு போராடி வருகின்றனர். முதன் முதலாக டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக் கழகம், குரு கோபிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக் கழகம் மற்றும் உபி அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்களும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டிசம்பர் 15ஆம் தேதி டெல்லியில் நடந்த இந்த போராட்டத்தின் போது காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் மாணவர்களைக் கலைத்தனர். அப்போது அங்கு வன்முறை வெடித்தது.

கடந்த டிசம்பர் 15ஆம் தேதி நடந்த இந்த வன்முறை தொடர்பாக, உபி அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக மாணவர்கள் 10,000 பேர் மீது டிசம்பர் 24ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

144 தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதாக இந்தியத் தண்டனைச் சட்டம் 188 மற்றும் 341 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த மாணவர்கள் அடையாளம் தெரியாதவர்கள் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

10,000 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததாக வெளியான தகவல் மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் 1000 பேர் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்திருப்பதாக உபி போலீஸ் கூடுதல் எஸ்பி. ஆகாஷ் குலாஹரி தெரிவித்துள்ளார்.

அவர், “எழுத்துப்பிழை காரணமாக 1,000 என்பது 10,000ஆக அறியப்பட்டது. 1000 மாணவர்கள் மீதுதான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் சட்டவிரோதமாகத் தேச விரோத கோஷங்களை எழுப்பினர். பின்னர் காவல் துறையினர் மீது கற்களை வீசியதுடன், போலீஸ் வாகனங்களையும் சூறையாடியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது ”என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நேற்று(டிசம்பர் 27) தொழுகைக்கு வந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகை முடிந்ததும் டெல்லி ஜூம்மா மசூதி வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் டெல்லியில் பல்வேறு இடங்களில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் முக்கியமான இடங்களில், போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு ஆளில்லா விமானம் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor