மக்கா சென்று திரும்பியவர் விபத்தில் மரணம்!!

ஏறாவூர் பொலிஸ் பிரிவு சந்திவெளியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மக்கா சென்று நாடு திரும்பிய நிலையில், உறவினர்களைப் பார்க்கச் சென்றவேளையே குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

அதற்கமைய குறித்த நபர், கிண்ணியாவிலிருந்து சாய்ந்தமருதிலுள்ள தனது மகளைப் பார்க்கச் செல்லும் வழியில் மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை சந்திவெளியில் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

முச்சக்கரவண்டியில் பயணித்த அவர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் நிறுத்தப்பட்ட பேருந்தின் பின்புறமாகச் சென்று மோதியதில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் இதன்போது முச்சக்கரவண்டியில் அவருடன் பயணித்த உறவினர்களில் ஒரு பெண் கால் முறிந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இதேவேளை, உயிரிழந்தவரின் மனைவி, மனைவியின் தங்கையின் 4 வயது குழந்தை ஆகியோர் சிறு காயங்களுக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் அண்ணல் நகர், கிண்ணியாவை சேர்ந்த முஹம்மது இஸ்மாயில் மஹ்ரூப் (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor