ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஏழு இலங்கை வீரர்கள்

ஆசிய உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஏழு இலங்கை வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

தெற்காசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற ஏழு வீர, வீராங்கனைகளே இவ்வாறு பங்கேற்கவுள்ளனர்.

நேபாளத்தில் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை வீரர்கள் 15 தங்கப் பதக்கங்களை சுவீகரித்திருந்தனர்.

இந்த நிலையில், அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 12ஆம், 13ஆம் திகதிகளில் சீனாவின் ஹன்ங்ஸுவில் நடைபெறவுள்ள ஆசிய உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில், இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கங்களை வென்ற ஏழு வீரர்களை பங்கேற்கச் செய்ய இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய தெற்காசிய விளையாட்டு விழாவில் ஹெட்ரிக் தங்கப் பதக்கம் வென்ற டில்ஷி குமாரசிங்க (400 மற்றும் 800 மீற்றர்) அருண தர்ஷன (400 மீற்றர்), லக்ஷிகா சுகன்தி (60 மீற்றர், சட்டவேலி ஓட்டம் மற்றும் ஐந்து அம்சப் போட்டி), நிலானி ரத்னாயக்க (1500 மற்றும் 5000 மீற்றர்), இந்துனில் ஹேரத் (800 மீற்றர்) ஆகிய வீரர்கள் சுவட்டு நிகழ்ச்சிகளிலும், ஹசினி ப்ரபோதா பாலசூரிய (முப்பாய்யச்சல்) மற்றும் சாரங்கி சில்வா (நீளம் பாய்தல்) ஆகிய இருவரும் மைதான நிகழ்ச்சிகளிலும் இலங்கை சார்பாக பங்குபற்றவுள்ளனர்.

இதில் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றும் இந்துனில் ஹேரத்தைத் தவிர மற்ற 6 வீரர்களும் முதல்தடவையாக ஆசிய உள்ளக மெய்வல்லுனர் தொடரில் பங்கேற்கவுள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்