தமிழில் தேசிய கீதம் பாடும்போது அரசியலமைப்பு மீறப்படுகின்றது

தேசிய கீதத்தை தமிழில் பாடும்போது சிங்கள மொழி ஊடான அரசியல் யாப்பு மீறப்படுகின்றது. அதேபோன்று  சிங்கள மொழி  ஊடாக பாடும்போது தமிழ் மொழி மூலமான அரசியல் யாப்பு மீறப்படுகின்றதென ஓய்வுபெற்ற ரியல் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய கீதத்தை தமிழில் இசைப்பது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக சரத் வீரசேகர மேலும் கூறியுள்ளதாவது, “தேசிய கீதம் சிங்களத்தில் ஸ்ரீலங்கா மாதா என்றே கூறப்பட்டுள்ளது. இவ்வாறே ஆங்கில மொழி  ஊடான அரசியல் யாப்பிலும் ஸ்ரீலங்கா மாதா என்றே கூறப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள அரசியல் யாப்பில் மாத்திரம் ஸ்ரீலங்கா தாயே என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் ஒரு தேசிய கீதம் இருக்க வேண்டியது அவசியமென கூறப்படுகின்றது. இந்தக் கருத்தை வைத்து அல்ல. நான் தமிழில் தேசிய கீதம் இசைப்பதற்கு எதிராக கருத்துத் தெரிவித்தேன். மாறாக, தமிழில் தேசிய கீதம் இசைப்பது அரசியல் யாப்புக்கே முரணானது.

அரசியல் யாப்பின் 22 ஆவது உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம், அரசியல் யாப்பில் தெளிவில்லாத ஒரு நிலைமை காணப்படுமாயின், சிங்கள மொழியில் காணப்படும் கருத்துக்கே முதலிடம் கொடுக்கப்பட வேண்டும்.

எனவே  தமிழில் தேசிய கீதம் இசைக்கும்போது அரசியல் யாப்பு மீறப்படுகின்றதை அங்கீகரிக்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்