
கொழும்பு – புறக்கோட்டை சந்தையில் சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய சீனி, பருப்பு, பெரிய வெங்காயம் போன்றவற்றின் விலைகள் குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்களின் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஹேமக பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக்கிழங்கிற்கு விதிக்கப்பட்டிருந்த சுங்க வரி 25 ரூபாயினால் குறைக்கப்பட்டதனால், புறக்கோட்டை மொத்த சந்தையில் ஒரு கிலோ உருளைக்கிழங்கின் மொத்த விலை 30 ரூபாவியினால் குறைந்துள்ளது.
ஒரு கிலோ உருளைக்கிழங்கின் மொத்த விலை 170 ரூபாயிலிருந்து 135 ரூபாயாக குறைவடைந்துள்ளதுடன், போதுமானளவு வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 60 தொடக்கம் 100 ரூபாயுக்கும் இடைப்பட்ட விலையில் குறைவடைந்துள்ளது.
கோதுமை மா இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமையால் துருக்கி மற்றும் நெதர்லாந்தில் இருந்து அவை கொண்டுவரப்பட்டு ஒரு கிலோ கோதுமை மா 75 ரூபாயுக்கு விற்பனை செய்யக்கூடியதாக இருக்குமென்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை பண்டிகைக் காலப்பகுதியில், உணவுப் பொருட்களை எந்தவித தட்டுப்பாடுமின்றி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.