ராஜிதவிற்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியரை விசாரியுங்கள்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு சிகிச்சை அளித்து வரும் வைத்தியர் முபாரக்கை குற்றத் தடுப்பு பிரிவு விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென நவ சிங்களே தேசிய அமைப்பின் தலைவர் டான் பிரியசாத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன, நாரஹேன்பிட்ட தனியார் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகின்றமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக டான் பிரியசாத் மேலும் கூறியுள்ளதாவது, “முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவை காப்பாற்றுவதற்காகவே வைத்தியர் முபாரக், பொய்யாக சிகிச்சை வழங்கி வருகின்றார்.

எனவே ராஜிதவின் உடல் நலம் குறித்து அரச வைத்திய அதிகாரி ஒருவரின் ஊடாக பரிசோதனை நடத்தப்பட வேண்டுமென  குற்றத்தடுப்புத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளேன்.

மேலும் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை வைத்துக் கொண்டு சிகிச்சை அளிப்பது தொடர்பாக, வைத்தியர் முபாரக் குறித்து குற்றத் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்த வேண்டுமெனவும் அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளேன்.

இதேவேளை நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று, ராஜித  தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரையுள்ள நாட்களில் அவருக்கு எவ்வகையான பரிசோதனை முன்னெடுக்கப்பட்டன என்பது தொடர்பாகவும் அரச மருத்துவ அதிகாரிகளினால் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்