
சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான வைத்திய பரிசோதனை மற்றும் வைத்திய சான்றிதழ் அரசாங்கத்தின் வைத்தியசாலைகள் மூலம் விநியோகிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவிகபட்டுள்ளது.
இத்தகவலை போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுலுகம தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சமீபத்தில் மேட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டபோது பொதுமக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டன.
இதற்கு தீர்வாக இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் பொழுது பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர் அதனை பூரணப்படுத்தி மீண்டும் வழங்குவதற்கான குறிப்பிட்ட நேரத்தை விண்ணப்பதாரருக்கு SMS மூலமாக அறிவிப்பதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் உபாலி ஜயசேகர தெரிவிக்கையில், திணைக்களத்தின் தொழில்நுட்ப பிரிவின் ஒத்துழைப்புடன் இந்த புதிய நடவடிக்கையை 2 வார காலத்திற்குள் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.