
நியூசிலாந்தைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஒருவர், உயிரிழப்பதற்கு முதல் நாள் அவரது காதலியை திருமணம் செய்துக் கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நியூசிலாந்தைச் சேர்ந்த நேவர் ஹெட்வர்ட் குயின்லாந்து பகுதியில் உள்ளூர் கால்பந்து வீரராக போட்டிகளில் பங்கேற்று வந்தார். இவர் பல்வேறு உள்ளூர் போட்டிகளில் கலந்துக் கொண்டு சிறப்பாக விளையாடியுள்ளார்.
நேவர், கடந்த சில நாட்களுக்கு முன் மூளையில் ஏற்பட்ட கட்டியால் கடுமையாக பாதிக்கப்பட்டார். இதனையடுத்து மன அழுத்தத்தின் காரணமாக வீட்டிலேயே முடங்கிப் போய் இருந்தார். நேவர், நீண்ட நாட்களாக மய்யா எனும் பெண்ணுடன் காதல் தொடர்பில் ஈடுபட்டு வந்தார்.
இவரது நிலையை உணர்ந்த மய்யா, உடனடியாக திருமணம் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார். நேவர், ‘என்னால் இயல்பாக மனிதர்களைப் போல செயல்படக் கூட முடியாத நிலையில் மய்யாவை திருமணம் செய்ய முடியாது’ எனக்கூறி மறுத்து வந்துள்ளார்.
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நேவரை கடைசி நேரத்தில் சமாதானம் செய்து, மய்யா இணங்க வைத்தார். இதனையடுத்து குடும்பத்தார், நண்பர்கள் ஆகியோர் முன்னிலையில் நேவர்-மய்யா திருமணம் நடைப்பெற்றது.
திருமணத்தின் போது நேவர் மற்றும் குடும்பத்தினர் கவலை தோய்ந்த முகத்துடன் இருந்தனர். அப்போது காதலி மய்யா மற்றும் அவரது நண்பர்கள் நேவரை உற்சாகப்படுத்தும் வகையில் வரவேற்று நடனமாடினர்.
இந்த நிலையில் நேவர், திருமணம் முடிந்த மறுநாளே உயிரிழந்துவிட்டார். அவரது காதல் மனைவி மய்யா, நேவரின் நினைவுகளுடன் வாழ்வதே வரம் என கண்ணீர் மல்க கூறியுள்ளார். இந்த சம்பவம் நியுஸிலாந்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.