மிலேனியம் ஒப்பந்தத்தை கிழித்தெறிவேன் – சஜித்!!

மிலேனியம் சவால் நிதிய ஒப்பந்தம் மட்டுமல்லாது எக்சா, சோபா, இலங்கை- சிங்கப்பூர் ஒப்பந்தம் என இலங்கைக்கு எதிரான அனைத்து ஒப்பந்தங்களையும், ஸ்ரீ மா போதிக்கு முன்னாள் துண்டுத் துண்டுகளாக கிழித்தெறிவேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த நாட்டின் பெரும்பான்மையானோர், நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்கள் எதிலும் கையெழுத்திட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்கள்.

ஆனால், இந்த சர்ச்சை எப்படி ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் வந்தது என்றுதான் எனக்குத் தெரியவில்லை. இவ்வாறுதான் எமது தரப்பினர், தேர்தல் நேரத்தின்போது எமக்கு உதவி செய்தார்கள்.

நாடே ஒரு ஒப்பந்தத்தை வேண்டாம் என நிராகரிக்கும்போது, யாரும் மக்களின் ஆணையை நிராகரிக்கவில்லை.

மக்களின் குரல் இதன்போது நிராகரிக்கப்பட்டது. இதனால், நாட்டு மக்கள் என்னையும் தேசத் துரோகிகள் பட்டியலில் சேர்த்தார்கள்.

எனது தோல்விக்கு, அமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்த பேச்சும் மிகப்பெரிய காரணம் என நான் உறுதியாக நம்புகிறேன்.

ஒருவேளை ஜனவரி 3ஆம் திகதி நான் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டால், மிலேனியம் சவால் நிதிய ஒப்பந்தம் மட்டும் அல்ல, எக்சா, சோபா, இலங்கை- சிங்கப்பூர் ஒப்பந்தம் என எதனையும் செய்ய அனுமதிக்க மாட்டேன்.

இவற்றை ஸ்ரீ மா போதிக்கு முன்னாள் துண்டுத் துண்டுகளாக கிழித்தெறிவேன் என்பதை இவ்வேளையில் நான் மக்களுக்கு உறுதியுடன் கூறிக்கொள்கிறேன்.

இதற்காக அரசாங்கத்துக்கு பூரண ஒத்துழைப்பு நாம் வழங்குவோம். ஜனநாயகத்துக்கு நாம் என்றும் மதிப்பளிப்பவர்கள் என்ற ரீதயில் நாம் மக்களின் ஆணையை ஒருபோதும் மீறி செயற்பட மாட்டோம்” என மேலும் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor