நாட்டுப்படகை கடத்தி, இலங்கைக்கு தப்பி வந்துள்ள அகதிகள்!!

இராமேஸ்வரத்திலிருந்து நாட்டுப்படகை கடத்தி, 4 அகதிகள் இலங்கைக்கு தப்பி வந்துள்ளதாக நெடுந்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுருந்த அந்தோணி குருஸ், முஜிபுர் ரஹ்மான் ஆகிய இருவரும் வேறொரு முகாமில் தங்கியிருந்த இரண்டு பேர்களுடன் ராமேஸ்வரதிலிருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு அனுமதியின்றி சென்றிருப்பதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

பாம்பன் பிரான்சிஸ் நகரைச் சேர்ந்த ஜஸ்டீன் என்பவர், ராமேஸ்வரம் அந்தோணியார் ஆலய கடற்கரைப் பகுதியில் தனது நாட்டுப் படகு மூலம் தொழில் செய்து வருகின்றார்.

இவர் வழக்கம்போல், கடந்த வியாழக்கிழமை காலை கடற்கரைக்கு சென்று பார்த்தப்போது, நாட்டுப் படகு காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் படகை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து ஜஸ்டீன் ராமேஸ்வரம் பொலிஸ் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் முறைப்பாடு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் யாழ்ப்பாணம்-நெடுந்தீவு கடற்கரைக்கு, இந்த நாட்டுப்படகிலிருந்து இலங்கையைச் சேர்ந்த மூன்று ஆண் அகதிகளும், ஒரு பெண் அகதியும் இன்று (சனிக்கிழமை) அதிகாலை கரை இறங்கியுள்ளனர். இவர்களை நெடுந்தீவு பொலிஸார் கைது செய்து பின்னர் ஆவணங்களை சரி பார்த்த பின்னர் விடுவித்துள்ளனர்.

மண்டபம் க்யூ பிரிவு பொலிஸாரின் விசாரணையில், மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்த அகதிகள் இருவரும், வேறொரு முகாமில் தங்கியிருந்த இரண்டு அகதிகளும் ராமேஸ்வரதிலிருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு அனுமதியின்றி சென்றிருப்பது தெரியவந்துள்ளது.


Recommended For You

About the Author: Editor