யாழின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதியின் புதிய உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்பில் கவனம் எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு சபை ஆலோசனை கூட்டத்தில் டக்ளஸ் தேவானந்தா இந்த கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்தார்.

சோதனைகள் என்ற பெயரில் நாட்டில் அனர்த்தங்கள் இடம்பெற்ற ஏனைய பகுதிகளைவிட வடக்கு நோக்கியதான பகுதிகளிலேயே ஏற்பாடுகள் அதிகமாகி இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

சோதனை நடவடிக்கைகள் நாட்டின் தற்போதைய நிலையில் தேவை என்கின்ற போதிலும், அது அளவுக்கு அதிகமாகி, மக்களுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தவதாக அமைந்து விடக் கூடாது.

கடந்த காலங்களில் தங்களது சுயலாப பாசாங்கு அரசியலுக்காக வடக்கின் தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகள் ஆடிக் கொண்டு வந்திருந்த குத்தாட்டங்கள் காரணமாக அதிருப்தி கொண்ட நிலையில், பாதுகாப்புத் தரப்பினர் அந்த அதிருப்தியினை தங்கள் மீது காட்டுவதாகவே வட மாகாண மக்கள் அங்கலாய்த்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தற்போது போதைப்பொருள் கடத்தல், வாள்வெட்டு தாக்குதல் சம்பவங்கள் மட்டும் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. வேறு வகையில் பாதுகாப்பு நெருக்கடிகள் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கை தொடர்பில் உடனடியாக கவனமெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இராணுவத் தளபதிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor